மத்திய அரசும், தமிழக அரசும் கூட்டு சேர்ந்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் தமிழகத்திற்கு துரோகம் இழைத்து விட்டதாக திமுக செயல்தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய அரசு தீர்ப்பை அலட்சியப்படுத்தி ஆவணப்போக்கில் செயல் படும் வேளையில், அதிமுக அரசோ மத்திய அரசைத் தட்டிக்கேட்க முடியாமல் அடிமையாக காலம் கடத்துவதாகக் கூறி யுள்ளார். அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 3 தீர்மானங்களை செயல்படுத்த முடியாமல் அதிமுக அரசு படு தோல்வி அடைந்துவிட்டதாகவும் ஸ்டாலின் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இப்போதாவது தமிழக அமைச்சரவையைக் கூட்டி, மத்திய அரசு மற்றும் பிரதமரைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என முதலமைச்சருக்கு வலியுறுத்தியுள்ளார். ஊழல் வழக்குகளில் இருந்து தப்பிக்க வேண்டும் என்பதற்காக தமிழக உரிமைகளை காவு கொடுத்துவிட்டு பாரதிய ஜனதாவிற்காக மட்டும் உழைப்பதை கைவிட வேண்டும் என்றும் திமுக செயல்தலைவர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.