ஜல்லிக்கட்டு நடைபெறும் என்று முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் 2015-ம் ஆண்டில் கொடுத்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை என எதிர்க் கட்சித்தலைவர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
அலங்காநல்லூரில் பாரம்பரியமாக ஜல்லிக்கட்டு நடைபெறக்கூடிய பகுதியின் வாடிவாசல் முன் திமுக சார்பில் போராட்டம் நடைபெற்றது.அப்போது பேசிய மு.க.ஸ்டாலின், ‘கடந்த 2015-ம் ஆண்டு சட்டமன்றத்தில் பேசிய ஓ.பன்னீர்செல்வம் கண்டிப்பாக ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படும். அதற்கான நடவடிக்கையை அதிமுக அரசு எடுக்கும் என்றார். அது அவைக்குறிப்பில் ஏற்றப்பட்டது. இதையடுத்து 2 ஆண்டுகள் கடந்து இப்போது 2017-ம் ஆண்டும் வந்துவிட்டது. ஆனால் ஜல்லிக்கட்டுதான் வரவில்லை’ என்றார். மேலும், இந்தக் கூட்டத்துக்கு திமுக அழைப்பு விடுத்திருந்தாலும், தமிழரின் பாரம்பரிய, கலாசார சின்னமான ஜல்லிக்கட்டு நடைபெற ஆதரவு தெரிவிக்கும் அனைத்து தரப்பினரும் பங்கேற்றிருப்பதாக ஸ்டாலின் குறிப்பிட்டார். இந்த போராட்டத்தில் திமுகவினர் மட்டுமின்றி காங்கிரஸ் உள்ளிட்ட அதன் கூட்டணிக் கட்சியினரும் பங்கேற்றனர். ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான சங்கங்களும், காளை வளர்ப்போரும், இளைஞர்களும் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.