தமிழகத்தில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு நிவாரணத் தொகையை பெற தமிழக அரசு, மத்திய அரசுக்கு அழுத்தம் தரவேண்டும் என மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
பருவமழை பொய்த்ததாலும், அரசின் நிவாரண உதவிகள் கிடைக்காததாலும் அனைத்துத் தரப்பு விவசாயிகளும் மிக மோசமாக பாதிக்கப்பட்டிப்பதாக தெரிவித்துள்ள மு.க.ஸ்டாலின், அண்டை மாநிலமான கர்நாடக அரசு எடுத்த நடவடிக்கைகள் காரணமாக அந்த மாநிலத்திற்கு மத்திய அரசு வறட்சி நிவாரண நிதியாக 1788. 44 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார்.
பாசனத்திற்கு தேவையான தண்ணீர் பிரச்னை மட்டுமின்றி மாநிலம் முழுவதும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயமும் உருவாகியுள்ளதாக ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். தமிழகத்தில் இனி ஒரு விவசாயி கூட வறட்சி காரணமாக உயிரிழக்க கூடாது என வலியுறுத்தியுள்ள ஸ்டாலின், உயிரிழந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு நிவாரணத் தொகையும், கருகும் பயிரால் வாடி வேதனையில் தவிக்கும் விவசாயிகளுக்கு இழப்பீடும் வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.