தமிழ்நாடு

கொலையாளிகளை கைது செய்ய வேண்டும் என முதல்வருக்கு நினைவூட்ட வேண்டுமா? - ஸ்டாலின்

கொலையாளிகளை கைது செய்ய வேண்டும் என முதல்வருக்கு நினைவூட்ட வேண்டுமா? - ஸ்டாலின்

webteam

கொலையாளிகளை ஐபிசி 302-ன் கீழ் கைது செய்ய வேண்டும் என முதலமைச்சருக்கு தான் நினைவூட்ட வேண்டுமா என திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

சாத்தான்குளத்தில் விசாரணைக் கைதிகளாக அழைத்துச் செல்லப்பட்ட தந்தை, மகனுமான ஜெயராஜ் மற்றும் பென்னீஸ் ஆகியோர் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இந்தச் சம்பவத்திற்கு நாடு முழுவதும் கடும் கண்டனங்கள் எழுந்து வருவதோடு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தாமாகவே முன்வந்து வழக்கை விசாரித்து வருகிறது.

இதனிடையே தந்தை, மகன் கைது செய்யப்பட்டபோது அவர்கள் எவ்வித தகராறும் இல்லாமல் காவல்நிலையத்திற்கு அழைத்துச்செல்லப்பட்டது கடையின் அருகில் இருந்த சிசிடிவி காட்சி மூலம் தெரியவந்துள்ளது. இந்நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில், “ஜெயராஜூம் பேன்னீசும் காயங்கள் ஏதுமின்றி போலீசாரால் அழைத்துச்செல்லப்பட்டிருப்பதை சிசிடிவி காட்சிகளும் ஊடகங்களின் கோப்புகளும் உறுதி செய்கின்றன. கொலையாளிகளை ஐபிசி 302-ன் கீழ் கைது செய்ய வேண்டும் என்பதை முதலமைச்சருக்கு நான் நினைவூட்ட வேண்டுமா?” என கேள்வி எழுப்பியுள்ளார்.