தமிழ்நாடு

சென்னையில் மழை பாதிப்பு பகுதிகளை நேரில் ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னையில் மழை பாதிப்பு பகுதிகளை நேரில் ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

கலிலுல்லா

வட சென்னையில் மழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார்.

இடி, மின்னலுடன் விடிய விடிய பெய்த கனமழையால் சென்னையில் பல்வேறு இடங்களில் மழைநீர் குளம்போல தேங்கி நிற்கிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. நுங்கம்பாக்கம், சைதாப்பேட்டை, கிண்டி, நங்கநல்லூர், ஈக்காடுதாங்கல், கே.கே.நகர் ஆகிய பகுதிகளில் நீர் தேங்கியிருக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர். முகப்பேர், சூளைமேடு, வியாசர்பாடி, பெரம்பூர், ஆழ்வார்பேட்டை, அண்ணாநகர், அம்பத்தூர், ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், ராயபுரம், திருவொற்றில் பகுதிகளிலும் மழை தொடர்ந்து பெய்துவருகிறது.

தொடர் மழையால் சென்னையின் முக்கிய சாலைகளில் மழை வெள்ளம் குளம் போல் தேங்கியுள்ளது. வட சென்னையில் பல்வேறு பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் என்ன செய்வதென்று தெரியாமல் அப்பகுதிவாசிகள் தவித்து வருகின்றனர். இந்நிலையில், வடசென்னையில் மழையால் பாதிக்கப்பட்டுள்ள இடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். தலைமைசெயலாளர் இறையன்பு,மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.தவிர, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழக்கமாக வரும் தனது காரில் செல்லாமல் மகேந்திரா ஜீப்பில் வந்து எழும்பூர் மற்றும் பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் மழை நீரில் இறங்கி ஆய்வு செய்தார்.

மேலும், கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்க வேண்டும் என திமுகவினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்விடுத்துள்ளார்.அரசு அதிகாரிகளுடன் இணைந்து மக்களுக்கு தேவையான நிவாரண பணிகளை மேற்கொள்ள வேண்டும் என திமுக எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.