தமிழ்நாடு

“உமா மகேஸ்வரி கொலைக் குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும்” - ஸ்டாலின்

webteam

நெல்லை முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி உட்பட 3 பேரை படுகொலை செய்த குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திமுகவை சேர்ந்த முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி, அவரது கணவர் உள்ளிட்ட மூன்று பேர் பயங்கரமாக படுகொலை செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. அவர்களின் மரணத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

1996ல் நெல்லை மேயராக தேர்ந்தெடுக்கப்பட்ட உமா மகேஸ்வரி கழக பணியிலும், பொதுமக்களுக்கான பணியிலும் அனைவரும் போற்றும் வகையில் சிறப்பாக பணியாற்றி கருணாநிதியின் பாராட்டைப் பெற்றவர். நெல்லை மாநகர முதல் பெண் மேயர் என்ற பெயரையும் பெற்ற அவர், எளிமைக்கு இலக்கணமானவர். மாற்றுக் கட்சியினரையும் அரவணைத்துக் கொண்டு மாநகராட்சி நிர்வாகத்தை யாரும் குறை சொல்ல முடியாத அளவிற்கு நடத்தியவர். 2011-ல் நடைபெற்ற கழக முப்பெரும் விழாவில் கருணாநிதியால் “பாவேந்தர் விருது” வழங்கி கௌரவிக்கப்பட்டவர். கழக மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர், மாவட்ட மகளிர் அணித் தலைவர், மற்றும் மாவட்ட துணை செயலாளராக இருந்த அவரது மறைவு திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், கழகத் தோழர்களுக்கும் ஆறுதலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

சட்டம் ஒழுங்கை கட்டிக் காப்பாற்ற முடியாத அதிமுக ஆட்சியில் தி.மு.க. நிர்வாகிகள் சமீப காலமாக படுகொலை செய்யப்படுவது கடும் கண்டனத்திற்குரியது. முன்னாள் மேயர் நெல்லை உமா மகேஸ்வரி கொலை விவகாரத்தில் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து சட்டத்தின் முன்பு நிறுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.