தமிழ்நாடு

நள்ளிரவில் மீண்டும் தேர்தல் ஆணையரை சந்தித்த ஸ்டாலின்...

நள்ளிரவில் மீண்டும் தேர்தல் ஆணையரை சந்தித்த ஸ்டாலின்...

webteam

உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் ஜனநாயக படுகொலை நடந்துக் கொண்டிருப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட 10 மாவட்டங்கள் தவிர பிற மாவட்டங்களில் கடந்த 27 மற்றும் 30 ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டது. 27 மாவட்டங்களில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளில் போட்டியின்றி தேர்வானவை தவிர, ‌73 ஆயிரத்து 405 பதவிகளுக்கு வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. ஊராட்சித் தலைவர், ஊராட்சி உறுப்பினர், ஒன்றிய கவுன்சிலர், மாவட்ட கவுன்சிலர் பதவிகளுக்கு வாக்காளர்கள் வாக்களித்தனர். பதிவான வாக்குகளை எண்ணும் பணிகள் நேற்று காலை 8 மணிக்கு பலத்த பாதுகாப்புடன் தொடங்கின. ‌சில இடங்களில் வெவ்வேறு காரணங்களுக்காக வாக்கு எண்ணிக்கை தாமதமாக தொடங்கியது. வாக்கு எண்ணும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

தேர்தல் முடிவுகளை முறையாக அறிவிக்க வேண்டும் என ஏற்கெனவே நேற்று மாலை தமிழக தேர்தல் ஆணையரிடம் திமுக தலைவர் ஸ்டாலின் முறையிட்டு இருந்த நிலையில், மீண்டும் நள்ளிரவில் தேர்தல் ஆணையரை சந்தித்து புகார் அளித்தார்.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “திமுக-வின் வெற்றியை நிறுத்தி அதிமுக வெற்றி என அறிவிக்கப்படுகிறது. வாக்கு எண்ணிக்கையில் ஜனநாயக படுகொலை நடக்கிறது. நியாயமாக, முறையாக முடிவுகளை அறிவிக்க கோருகிறோம்” எனத் தெரிவித்தார்.