தமிழ்நாடு

மேகதாது விவகாரம்: சோனியா, ராகுலுடன் ஸ்டாலின் ஆலோசனை

மேகதாது விவகாரம்: சோனியா, ராகுலுடன் ஸ்டாலின் ஆலோசனை

webteam

மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டுவது தொடர்பான பிரச்னை குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல்காந்தியுடன் திமுக தலைவர் ஸ்டாலின் பேசியுள்ளார். 

டெல்லி சென்றுள்ள ஸ்டாலின், காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியை அவரது இல்லத்தில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார். அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த இந்தச் சந்திப்பின்போது, நினைவுப்பரிசாக செம்மொழிச் சிற்பிகள் என்ற நூலை ஸ்டாலின் வழங்கினார். மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகளை ஒருங்கிணைக்க சோனியா காந்தி தூண்டுகோலாக இருப்பதாகவும் புகழாரம் சூட்டினார். டிசம்பர் 16ஆம் தேதி அண்ணா அறிவாலயத்தில் நடைபெறவுள்ள முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி சிலை திறப்பு விழாவுக்கான அழைப்பிதழையும் சோனியாவிடம் ஸ்டாலின் வழங்கினார்.

சுமார் 30 நிமிடங்கள் நீடித்த இந்த சந்திப்பின் போது‌ காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி மற்றும் திமுக நிர்வாகிகள் கனிமொழி, டி.ஆர்.பாலு, ஆ.ராசா, ஆர்.எஸ்.பாரதி ஆகியோரும் உடனிருந்தனர். இந்நிலையில் சோனியா காந்தி மற்றும் ராகுல்காந்தியுடனான சந்திப்பின் போது மேகதாது அணை குறித்து ஸ்டாலின் பேசியதாக கூறப்படுகிறது. கர்நாடகாவில் காங்கிரஸ் கூட்டணி அரசு ஆட்சியில் இருப்பதால் மேகதாதுவில் அணை கட்டுவது குறித்து சோனியா மற்றும் ராகுல்காந்தியிடம் ஸ்டாலின் பேசியுள்ளார். மேலும் நாளை டெல்லியில் நடைபெறவுள்ள எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்திலும் ஸ்டாலின் பங்கேற்கிறார்.