ஓணம், பக்ரீத் தளர்வுகளால் கேரளாவில் கொரோனா அதிகரித்ததை கவனத்தில்கொண்டே தமிழகத்தில் விநாயகர் சதுர்த்திக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
விநாயகர் சதுர்த்தி பண்டிகையை கொண்டாட தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதற்கு என்ன காரணம் என்பது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் பேரவையில் விளக்கம் அளித்துள்ளார். அவர் பேசுகையில், ''ஓணம், பக்ரீத் தளர்வுகளால் கேரளாவில் கொரோனா அதிகரித்ததை கவனத்தில்கொண்டே தமிழகத்தில் விநாயகர் சதுர்த்திக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
கொரோனாவை கட்டுபடுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு ஒன்றிய அரசு அறிவுறுத்தியுள்ளது. கொரோனா தொற்று முழுமையாக கட்டுக்குள் வராததால் மக்களை பாதுகாக்கவே கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மேலும், விநாயகர் சிலை செய்யும் தொழிலாளர்களுக்கு 10,000 ரூபாய் நிதி உதவி வழங்கப்படும். சிலை செய்யும் 3 ஆயிரம் மண்பாண்ட தொழிலாளர்களுக்கு மழைக்கால நிதி ரூ.5ஆயிரத்துடன் கூடுதலாக ரூ.5ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும்'' என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.