தமிழ்நாடு

நெருங்கும் நகர்ப்புற தேர்தல் - டிஜிபி உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஸ்டாலின் ஆலோசனை

நெருங்கும் நகர்ப்புற தேர்தல் - டிஜிபி உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஸ்டாலின் ஆலோசனை

கலிலுல்லா

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலவரம், மேற்கொள்ள வேண்டிய தொடர் நடவடிக்கை தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொள்கிறார்.

சென்னை தலைமை செயலகத்தில் நடைப்பெறும் ஆலோசனையில் தலைமை செயலாளர் இறையன்பு, உள்துறை செயலாளர் பிரபாகர்,துறை சார்ந்த செயலாளர்கள், டிஜிபி சைலேந்திர பாபு, சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால், சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி தாமரை கண்ணன், உளவுத்துறை ஏடிஜிபி டேவிட்சன் தேவாசிர்வாதம், உள்ளிட்ட உள்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் கலந்துக்கொள்ள உள்ளனர். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை சிறப்பாக செயல்படுத்த தமிழ்நாடு முதலமைச்சர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

குறிப்பாக, காவல் நிலையங்களில் பொதுமக்கள் கொடுக்கும் புகார்கள் மீது உடனடி நடவடிக்கை, குழந்தைகள் மற்றும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்தல், வீடுகளில் தனியாக இருக்கும் முதியோர்களின் பாதுகாப்பை உறுதி செய்தல் ‍, காவல் துறையை நவீனப்படுத்தும் நடவடிக்கைகள் என பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும்,குற்றச்சம்பவங்களை தடுக்க உடனடி நடவடிக்கை மேற்கொள்ளுதல் தொடர்பாகவும், சட்டம் ஒழுங்கை நல்ல முறையில் பராமரிக்க மேற்கொள்ள வேண்டிய தொடர் நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை மேற்கொண்டு பல்வேறு அறிவுரைகளை முதலமைச்சர் வழங்குவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமின்றி, உள்ளாட்சி தேர்தல் நடைப்பெற உள்ள நிலையில், சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாத வகையில் பாதுகாப்பை தீவிரப்படுத்துவது குறித்தும், இதுவரை எடுத்த நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.