தமிழ்நாட்டின் 2026-27ஆம் நிதியாண்டுக்கான முதல் பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் மரிய வில்சன், இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசின் முதல் முழுமையான பட்ஜெட் இதுவாகும். இதில் கல்வி, மருத்துவம் மற்றும் முதியோர் நலனுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு பல புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. எனினும், இந்த பட்ஜெட்டில் பள்ளிக்கல்வித் துறை நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டிருக்கிறது எனவும் முந்தைய ஆட்சிக்காலக்கட்டங்களில் கொண்டுவரப்பட்ட திட்டங்களுக்கே தவெக அரசு பெயர் மாற்றி அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது எனவும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.
இந்தசூழலில் தான், முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின், Blast Blast ஆக இருக்கும் என எதிர்பார்த்த மக்களுக்கு Waste Waste என்று சொல்லும்படி பட்ஜெட் உள்ளது என தமிழ்நாடு அரசின் 2026-ம் ஆண்டுக்கான பட்ஜெட் குறித்து கடுமையாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று சட்டமன்றத்தில் வாசிக்கப்பட்ட தமிழ்நாடு பட்ஜெட் 2026 பற்றி Reels CM-க்குப் புரியும் மொழியில் சொல்ல வேண்டுமென்றால், 'Blast Blast'-ஆக இருக்கும் என எதிர்பார்த்த மக்களுக்கு, ‘Waste Waste' எனச் சொல்லும்படிதான் இருக்கு!
அதுமட்டுமல்ல, இது திராவிட மாடல் அரசின் திட்டங்களின் Remake Version budget!
மக்கள் மொழியில் சொல்ல வேண்டுமென்றால், விவசாயிகள் பிரச்சினை, மின் கட்டணக் குளறுபடி பிரச்சினை, விலைவாசி உயர்வுப் பிரச்சினை என எதைப் பற்றியும் கவலையின்றி, மாநிலத்திற்குத் தேவையான புதிய தொலைநோக்குத் திட்டங்களையும் அறிவிக்காத பட்ஜெட்!
அதுமட்டுமல்ல, - ரூ.2,500 மகளிர் உரிமைத் தொகை, - வேலையில்லா இளைஞர்களுக்கு ரூ. 4 ஆயிரம், - ஆண்டுக்கு 6 இலவச சிலிண்டர், - முழுப் பயிர்க்கடன் தள்ளுபடி, என முக்கிய வாக்குறுதிகள் எதைப் பற்றியும் மூச்சே விடாத பட்ஜெட்! மொத்தத்தில், சொந்தமாகவும் யோசிக்காத - சொன்னதையும் செய்யாத - சுரத்தில்லாத - புஸ்வாண பட்ஜெட்டாகத்தான் ‘ரீல் அரசின்’ முதல் பட்ஜெட் அமைந்திருக்கிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.