ஆட்சி, எடப்பாடியின் கையிலா? மணல் கொள்ளையர்கள் கையிலா? என திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
சட்டவிரோதமாக குளத்தில் மண் எடுத்த ஆளும் கட்சி பிரமுகர்களின் லாரிகளைப் பிடித்து, வழக்குப்பதிவு செய்த காவல்துறை அதிகாரிகள் அதிரடியாகத் தென்மண்டலத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த லாரிகள், முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கமான சேலம் பகுதியைச் சேர்ந்த, ‘சேலம் மைன்ஸ்’ நிறுவனத்திற்குச் சொந்தமானது எனவும் கூறப்படுகிறது. எடப்பாடி பழனிசாமியின் லாரியையே மடக்கி வழக்கு பதிவு செய்வதா என சிலர் மிரட்டியதாக செய்திகள் வெளியாகின.
இந்நிலையில் இதுகுறித்து திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் “இது எடப்பாடி பழனிசாமியின் லாரி என மிரட்டும் அளவுக்கு, சமூக விரோதிகள் நடமாட்டத்துக்கு முதலமைச்சர் பெயரைப் பயன்படுத்துவது போன்ற அராஜகம் வேறு என்ன இருக்க முடியும்? ஆட்சி, எடப்பாடியின் கையிலா? மணல் கொள்ளையர்கள் கையிலா? தமிழகத்தில் நடப்பது சட்டத்தின் ஆட்சியா? குற்றத்தின் ஆட்சியா?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.