தமிழ்நாடு

டாஸ்மாக் எலைட் விற்பனை நிலைய ஊழியர்களுக்கு சீருடையாக பிளேஸர்..!

டாஸ்மாக் எலைட் விற்பனை நிலைய ஊழியர்களுக்கு சீருடையாக பிளேஸர்..!

webteam

டாஸ்மாக் எலைட் விற்பனை நிலையங்களின் ஊழியர்களுக்கு புதிய சீருடைகள் வழங்கப்பட்டுள்ளன. அதில் நிறுவனத்தின் லோகோவைக் கொண்ட பிளேஸரும் உள்ளது.

டாஸ்மாக் என அழைக்கப்படும் தமிழ்நாடு மாநில சந்தைப்படுத்தல் கழக லிமிடெட், மாநிலம் முழுவதும் 83 எலைட் விற்பனை நிலையங்களைக் கொண்டுள்ளது. அவற்றில் 31 எலைட் விற்பனை நிலையங்கள் சென்னையில் உள்ளன. இந்நிலையில், டாஸ்மாக் எலைட் விற்பனை நிலையங்களின் ஊழியர்களுக்கு நிறுவனத்தின் லோகோவைக் கொண்ட பிளேஸர்கள் புதிய சீருடைகளாக வழங்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து டாஸ்மாக் அதிகாரி ஒருவர் கூறுகையில், "சென்னையில் உள்ள எலைட் கடைகளில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களுக்கும் நாங்கள் பிளேஸர்களை வழங்கியுள்ளோம். மற்ற மாவட்டங்களில் உள்ள ஊழியர்களுக்கு வரும் நாட்களில் பிளேஸர்களை வழங்குவோம். அனைத்து எலைட் கடைகளும் குளிரூட்டப்பட்டவை என்பதால், பிளேஸர்கள் பயனுள்ளதாக இருக்கும்”எனக் கூறினார்.

பெரும்பாலான எலைட் கடைகள் மால்கள் மற்றும் உயர்நிலை இடங்களில் உள்ளன எனவும் இந்த பிளேஸர்கள் தொழில்முறை தோற்றத்தை கொடுப்பதாகவும் எழும்பூரில் உள்ள எலைட் விற்பனை நிலையத்தின் ஊழியர் ஒருவர் தெரிவிக்கிறார். இந்த எலைட் விற்பனை கடைகளை தவிர மாநிலத்தில், 5,152 மதுபான விற்பனை கடைகளும், 1,872 பார்களும் உள்ளன. 2018 - 2019 ஆம் ஆண்டில் டாஸ்மாக் மதுவிற்பனை மூலம் ரூ. 31,157 கோடியை வருமானமாக அரசு ஈட்டியுள்ளது.