தமிழ்நாடு

10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு இன்று தொடக்கம்

10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு இன்று தொடக்கம்

webteam

தமிழகம், புது‌சேரியில் எஸ்எஸ்எல்சி எனப்படும் 10ஆம் ‌‌வகுப்பு மாணவர்களுக்கா‌ன பொதுத்தேர்வு ‌இன்று தொடங்குகிறது.

தமிழகம், புதுச்சேரியில் மொத்த‌ம் ‌9 லட்சத்து 97 ஆயிரத்து 794 மாண‌‌வ‌, மாணவிகள்‌ ‌இந்த தேர்வை எழுதுகின்றனர். இதில், 4 லட்சத்து 83 ஆயிரத்து 300 மாணவர்களும், 4 லட்சத்து 76 ‌‌‌ஆயிரத்து 318 ‌மாணவிகளும், மூன்றாம் பாலினத்தவர்கள் 4 பேரும் அடங்குவர். தனித் தேர்வர்கள் 38 ஆயிரத்து 172 பேரும், 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதுகின்றனர். மேலும் மத்திய சிறைகளில் உள்ள 152 கைதிகள் புழல், திருச்சி, பாளையங்கோட்டை, கோவை ஆகிய சிறைகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள மையங்களில் தேர்வெழுதுகிறார்கள்.

இதற்காக 3 ஆயிரத்து 731 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. முதல் நாளான இன்று , தமிழ் முதல்தாள் தேர்வு நடைபெறுகிறது. மொழிப்பாட தேர்வுகள் மட்டும் பிற்பகல் 2 மணி முதல் 4.45 மணி வரை நடைபெறவுள்ளது. மற்ற தேர்வுகள் காலை 10 மணி முதல் 12.45 மணி வரை நடைபெறவுள்ளன. தேர்வு தொடர்பாக புகார் தெரிவிக்கவும், ஆலோசனைகள் பெறவும் தேர்வு கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ள அரசு தேர்வுகள் இயக்குநர் வசுந்தராதேவி, தேர்வு மையங்களில் செல்போனுக்கு முற்றிலும் தடைவிதிக்கப்பட்டுள்ளதாகவும், தேர்வறையில் ஆசிரியர்களும் செல்போன் பயன்படுத்தக் கூடாது என்றும் தெரிவித்துள்ளார். மேலும்  ஒழுங்கீன செயல்களில் ஈடுபடும் மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்