புழல் மத்திய சிறையில் நடைபெற்ற பத்தாம் வகுப்புத் தேர்வில் 67 வயது கொலை வழக்குக் கைதி ஒருவர் தேர்வெழுதினார்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தொடங்கின. ஏப்ரல்20ஆம் தேதி வரை நடைபெறவுள்ள 10ம் வகுப்பு பொதுத்தேர்வை, 36 ஆயிரத்து 649 தனித்தேர்வர்கள் உட்பட மொத்தம் 9 லட்சத்து 64 ஆயிரத்து 491 மாணவர்கள் எழுதுகின்றனர். இதற்காக 3 ஆயிரத்து 609 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இன்று நடைபெற்ற தமிழ் முதல் தாள் தேர்வை மாணவர்கள் தவிர்த்து 186 கைதிகள் மற்றும் 5 திருநங்கைகளும் தேர்வெழுதினர். இதற்காக புழல், திருச்சி, பாளையங்கோட்டை, கோவை மத்திய சிறைகளில் சிறப்பு தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டன.
அதன்படி சென்னை புழல் மத்திய சிறையில் அமைக்கப்பட்டிருந்த சிறப்பு தேர்வு மையத்தில், சேட்டு என்ற 67 வயது கொலை வழக்குக் கைதியும் பத்தாம் வகுப்பு தேர்வை எழுதினார். அவர் மட்டுமின்றி வேலூர், கடலூர் உள்ளிட்ட சிறைகளிலிருந்து 56 கைதிகள் தேர்வெழுத விண்ணப்பித்திருந்தனர். அதில் 50 பேர் மட்டுமே இன்று தேர்வு எழுதினர். இதேபோன்று நெல்லை பாளையங்கோட்டை சிறையில் 26 கைதிகள் இன்று பத்தாம் வகுப்பு தேர்வை எழுதினர். இதனை நெல்லை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி நேரில் பார்வையிட்டார்.