தமிழ்நாடு

வில்சன் கொலை வழக்கு - சிம் கார்டு கொடுத்ததாக கைது செய்யப்பட்டவருக்கு ஜாமீன் மறுப்பு

வில்சன் கொலை வழக்கு - சிம் கார்டு கொடுத்ததாக கைது செய்யப்பட்டவருக்கு ஜாமீன் மறுப்பு

webteam

சிறப்பு எஸ்.ஐ வில்சன் கொலை வழக்கில் பயங்கரவாதிகளுக்கு சிம் கார்ட் சப்ளை செய்‌ததாக கைது செய்யப்பட்ட ராஜேஷ் என்பவருக்கு ஜாமீன் மறுக்‌கப்பட்டுள்ளது.

சிறப்பு எஸ்.ஐ வில்சனை கொன்ற பயங்கரவாதிகளுக்கு சிம் கார்டு சப்ளை செய்ததாக ராஜேஷ் என்பவர் அண்மையில் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் ஜாமீன் கோரி ‌அவர் தாக்கல் செய்த மனு, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. போலியான ஆவணங்கள் என தெரிந்தே சிம் கார்டு வழங்கியதாக கியூ பிரிவு காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. ஜாமீன் வழங்கினால் சாட்சிகள் கலைக்க கூடும் என்றும் விசாரணை பாதிக்கும் எனவும் கூறப்பட்டது. இதனை ஏற்ற நீதிபதிகள் ராஜேஷின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தனர்.

முன்னதாக, கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சோதனைச் சாவடியில் பணியிலிருந்த எஸ்.எஸ்.ஐ. வில்சன் கடந்த 8ஆம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் பயங்கரவாதிகளுக்கு தொடர்பிருப்பது காவல்துறை விசாரணையில் தெரியவந்தது. தனிப்படை அமைத்து குற்றவாளிகளைத் தேடிய காவல்துறையினர் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த தவ்பீக் மற்றும் அப்துல் சமீம் ஆகியோரை கைது செய்தனர்.

அவர்கள் மீது உபா எனப்படும் சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இருவரையும் 10 நாட்கள் காவலில் எடுத்துள்ள தமிழக காவல்துறையினர் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்‌றனர்.