தமிழ்நாடு

சாத்தான்குளம் வழக்கில் கைதான எஸ்எஸ்ஐ பால்துரை கொரோனாவால் மரணம்

webteam

சாத்தான்குளம் வழக்கில் கைதான எஸ்எஸ்ஐ பால்துரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

சிறப்பு சார்பு ஆய்வாளர் பால்துரைக்கு வயது 56. இவர் சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு கடந்த ஜூலை 8ஆம் தேதி காவல் துறையால் கைது செய்யப்பட்ட நிலையில் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வந்தார். 8ஆம் தேதி முதல் 14ம் தேதி வரை 6 நாட்கள் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு பின்னர் ஜூலை 14ம் தேதி மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இவரிடம் சிபிஐ காவல் விசாரணை நடத்தப்படாத நிலையில் கடந்த 24ம் தேதி கொரோனோ தொற்று அவருக்கு உறுதி செய்யப்பட்டு தொடர் சிகிச்சை பெற்று வந்தார். இவர் ஏற்கனவே நீரழிவு நோயால் பாதிக்கப்பட்ட நிலையில் கொரோனோ பாதிப்பு ஏற்பட்டதால் உடல் நிலை மோசமாகி கடந்த 8ம் தேதி ஐசியு வார்டிற்கு மாற்றப்பட்டார். இந்நிலையில் சிகிச்சைப் பலனின்றி இன்று உயிரிழந்தார்.

முன்னதாக இவரது மனைவி மங்கையர்திலகம் தனது கணவருக்கு முறையான சிகிச்சையளிக்கப்படவில்லை எனவும் தனது கணவரின் உடல் உறுப்புகள் செயல் இழந்து வருவதுடன் சுய நினைவை இழந்து விட்டதாகவும் கூறி தனது கணவருக்கு ஜாமீன் வழங்குவதுடன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சையளிக்க கோரி மதுரை மாநகர் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.