சிறுமி உட்பட இருவர் உயிரிழந்த சோகம் pt desk
தமிழ்நாடு

ஸ்ரீவைகுண்டம் | தாமிரபரணி ஆற்றில் மூழ்கி 5 வயது சிறுமி உட்பட இருவர் உயிரிழந்த சோகம்

ஸ்ரீவைகுண்டம் அருகே தாமிரபரணி ஆற்றில் மூழ்கிய 5 வயது சிறுமி உள்பட 2 பேர் உயிரிழப்பு. செல்போனில் புகைப்படம் எடுத்த சில நிமிடங்களில் நடந்த சோக சம்பவம். என்ன நடந்தது. விரிவாக பார்க்கலாம்.

PT WEB

செய்தியாளர்: பே.சுடலைமணி செல்வன்

தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் அருகே உள்ள ஒய்யாங்குடி பகுதியைச் சேர்ந்தவர் லாரன்S (50). இவரது மனைவி கிளாடிஸ் ரெபெக்கா (45). இவர்கள் குடும்பத்துடன் ஒய்யாங்குடியில் உள்ள கிறிஸ்தவ ஆலய பிரதிஷ்டை நிகழ்ச்சிக்காக கடந்த சில தினங்களுக்கு முன்பு வந்துள்ளார். இந்த நிலையில் இன்று காலை ஒய்யாங்குடியில் இருந்து லாரன்ஸ் தனது குடும்பத்துடன்ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள தென்திருப்பேரை தாமிரபரணி ஆற்றில் குளிப்பதற்காக கிளாடிசின் தங்கை ஸ்டெபி புஷ்பா செல்வின், அவரது மகள் அவினா உள்பட 7 பேர் வந்துள்ளனர்.

இதையடுத்து கிளாடிஸ், அவருடை தங்கையின் 5 வயது பெண் குழந்தை அவினாவை அழைத்துக் கொண்டு ஆற்றில் இறங்கியுள்ளார். இதைத் தொடர்ந்து தண்ணீரை பார்த்த ஆனந்தத்தில் ஒவ்வொரு குழந்தையாக தண்ணீரில் குதித்துள்ளனர். அப்போது அவர்கள் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டதைப் பார்த்த கிளாடிஸ் குழந்தையை தூக்க முயன்றுள்ளார். அப்போது குழந்தை கிளாடிஸின் கழுத்தைப் பிடித்து இழுத்து மேலே வர முயற்சித்துள்ளது. ஆனால், குழந்தை அவினாவும், கிளாடிசும் எதிர்பாராத விதமாக தண்ணீருக்குள் மூழ்கினர். இதையடுத்து அவர்கள் இருவரையும் காப்பாற்றுவதற்காக பாலினா கிரேஸி சென்றுள்ளார். அவரும் தண்ணீரில் மூழ்கியுள்ளார்.

உடனே கரையில் இருந்த உறவினர்கள் வேகமாக ஆற்றுக்குள் இறங்கி மூவரையும் மீட்க முயற்சித்தனர். அதில், பாலினா கிரேஸி மட்டும் முதலில் உயிருடன் மீட்டு கரைக்கு கொண்டு வந்துள்ளனர். அதன்பிறகு நீண்ட நேர தேடலுக்குப் பிறகு மற்ற இருவரையும் ஆற்றுக்குள் இருந்து மீட்டு அருகே உள்ள தென்திருப்பேரை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு இருவரையும் பரிசோதனை செய்த மருத்துவர்கள் இருவரும் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

முன்னதாக தாமிரபரணி ஆற்றில் குளிக்க வந்த 7 பேரும் சேர்ந்து தங்களது செல்போன்களில் புகைப்படம் எடுத்து மகிழ்ந்துள்ளனர். அடுத்த சில நிமிடங்களில் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. இதைத் தொடர்ந்து பிரேத பரிசோதனைக்காக இருவரின் உடலும் திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் இந்த சம்பவம் குறித்து ஆழ்வார்திருநகரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.