தமிழ்நாடு

ஆரம்ப சுகாதார நிலையத்தில் சமூக இடைவெளி இல்லாமல் ஒரே சமயத்தில் கூடிய கர்ப்பிணி பெண்கள்!

kaleelrahman

அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒரே நேரத்தில் குவிந்த 150-க்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்கள் முறையாக முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளி இல்லாத காரணத்தால் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்திற்கு உட்பட்டது மதுரமங்கலம் கிராமம். இக்கிராமத்தைச் சுற்றி கண்ணந்தாங்கல், ராமானுஜபுரம், மேல்மதுரமங்கலம், சிங்கிள்பாடி, ஏகனாபுரம், காந்தூர் என பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.

இவர்களின் வசதிக்காக, 1961ஆம் ஆண்டு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கப்பட்டது. இதன் பயனாக, இப்பகுதி மக்கள் அவசர காலத்தில் சிகிச்சை பெற்றதுடன், கருவுற்ற பெண்கள், பேறு காலத்தில் சிரமம் இல்லாமல் சிகிச்சை பெற்றும் வந்தனர். மேலும் இந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வக பரிசோதனைகள், தடுப்பூசிகள், ஸ்கேன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி கடந்த இரண்டு வார காலமாக இந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மகப்பேறுக்கான பரிசோதனை எதுவும் மேற்கொள்ளாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து இன்று கர்ப்பிணி பெண்களுக்கு மகப்பேறு சம்பந்தமான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது. இதனால் ஒரே நேரத்தில் 150க்கும் மேற்பட்ட கர்ப்பிணிகள் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவ பரிசோதனைக்காக குவிந்தனர்.

இதையடுத்து முறையாக ஏற்பாடு செய்யப்படாத காரணத்தால் சமூக இடைவெளி எதுவும் இல்லாமல் ஒரு சிறிய அறையில் நூற்றுக்கணக்கான கர்ப்பிணிகள் பரிசோதனைக்காக காத்திருந்தனர். மருத்துவ பரிசோதனை என்பதால் கர்ப்பிணிகள் காலை உணவை தவிர்த்து வந்திருந்தனர். இதனால் 5-க்கும் மேற்பட்ட கர்ப்பிணிகள் ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்திலேயே மயக்கம் அடைந்தனர். இதனால் அவர்களுடன் வந்த உறவினர்கள் மருத்துவமனை நிர்வாகத்திடம் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர்.