இலங்கையில் நிகழ்ந்த ஈழத் தமிழர் படுகொலையை சர்வதேச போர்க்குற்றமாக கருதி சம்பந்தப்பட்டவர்களை தண்டிக்க வேண்டும் என அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சென்னை, ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதில், திமுக-காங்கிரஸ் ஆட்சியின் போது இலங்கை ராணுவத்திற்கு இந்திய அரசு அளித்த உதவிகளை இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே பகிரங்கப்படுத்தி இருப்பதால், அதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. திமுக-காங்கிரஸ் கூட்டணி அரசின் படுகொலைகளை சர்வதேச போர்க்குற்றமாக கருதி சம்பந்தப்பட்டவர்களை தண்டிக்க வேண்டும் எனவும் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.