தமிழ்நாடு

இலங்கை எழுத்தாளர் செ.கணேசலிங்கன் சென்னையில் காலமானார்

Veeramani

இலங்கை எழுத்தாளர் செ கணேசலிங்கன் இன்று சென்னையில் காலமானார்.

ஈழ இலக்கியத்தின் மிக முக்கியமான ஆளுமையாக விளங்கிய செ.கணேசலிங்கன்,  40க்கும் மேற்பட்ட நாவல்கள் மற்றும் சிறுவர் இலக்கியம், சிறுகதைகள், பொதுவுடமை கருத்துகள் உட்பட 70க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.

யாழ்ப்பாணத்தை கதைக்களமாக கொண்டு 1965 ஆண்டு இவர் எழுதிய ‘நீண்ட பயணம்’ என்ற புதினம், ஈழத்து புதினங்களில் முக்கியமான இடத்தை பெற்றுள்ளது, இந்த நூல் இலங்கை அரசின் சாகித்திய மண்டலப் பரிசினைப்பெற்றது. இவர் எழுதிய ‘மரணத்தின் நிழலில்’ என்ற நாவலுக்கு தமிழக அரசின் விருதும் கிடைத்துள்ளது.

குமரன் என்ற பதிப்பகத்தை தொடங்கி பல தரமான நூல்களை வெளியிட்டு வந்தார் செ.கணேசலிங்கன். இவர் 1971 ஆம் ஆண்டு ’குமரன்’ என்ற மாத இதழை ஆரம்பித்து தொடர்ந்து அதில் பொதுவுடமை கருத்துகள் அடங்கிய படைப்புகளையும் வெளியிட்டு வந்தார்.

சென்னை வடபழனியில் உள்ள தனது மகளின் இல்லத்தில் வசித்துவந்த கணேசலிங்கன் இன்று காலை உயிரிழந்தார்.