தமிழ்நாடு

“எரிபொருளுக்குக்கூட மீன்பிடிக்க முடியா நிலை.. இலங்கை கடற்படைதான் காரணம்”- மீனவர்கள் வேதனை

webteam

ராமேஸ்வரத்தில் நடுக்கடலில் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் விரட்டி அடிப்பதாக கரை திரும்பிய தமிழக மீன்பிடி தொழிலாளர்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.

ராமேஸ்வரத்தில் இருந்து நேற்று காலை 500-க்கும் மேற்பட்ட விசைப் படகுகளில் 2500-க்கும் மேற்பட்ட மீன்பிடித் தொழிலாளர்கள் மீன்பிடி அனுமதி சீட்டு பெற்று கடலுக்கு சென்றுள்ளனர். இவர்கள் நள்ளிரவில் கச்சத்தீவுக்கும் - தனுஷ்கோடிக்கும் இடையில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது, மூன்று ரோந்து கப்பல்களில் அங்கு சென்ற இலங்கை கடற்படையினர், ராமேஸ்வரம் மீனவர்களை விரட்டியடித்ததாக சொல்லப்படுகிறது.

இதனால் நூற்றுக்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன் பிடிக்க முடியாமல் வேறு திசைக்குத் திரும்பிச் சென்றுள்ளனர். இதனையடுத்து அப்பகுதியில் ரோந்துப் பணியில் இருந்த இலங்கை கடற்படையினர், தொடர்ச்சியாக மீண்டும் தமிழக மீனவர்களை விரட்டியடித்து அச்சுறுத்தியதால், இரவு முழுவதும் அவர்கள் மீன்பிடிக்க முடியாமல் போனதாக சொல்லப்படுகிறது. இதனால் தாங்கள் பெரும் நஷ்டத்தோடு கரை திரும்பியதாகவும் இன்று காலை கரை திரும்பியபின் அவர்கள் தெரிவித்துள்ளனர். இதில் படகு ஒன்றின் முன்பகுதி சேதமடைந்திருப்பதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். தாங்கள் இரவோடு இரவாக படகுடன் கரை திரும்பியதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

இலங்கை கடற்படையினரின் அச்சுறுத்தலால் படகு ஒன்றுக்கு 40 ஆயிரம் ரூபாய் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், எரிபொருளுக்குக் கூட மீன்பிடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், மத்திய மாநில அரசுகள் துரிதமாக நடவடிக்கை எடுத்தால் மட்டுமே தமிழக மீனவர்களின் பிரச்னைக்கு நிரந்தரமான தீர்வு கிடைக்கும் எனவும் அவர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். இந்த அச்சுறுத்தல்களால் ராமேஸ்வரம் துறைமுகம் வெறிச்சோடி காணப்படுகிறது.