தமிழ்நாடு

கொத்துக் கொத்தாக சிக்கிய கணவாய் மீன்கள் - போட்டி போட்டு வாங்கிச் சென்றதால் விலை அதிகம்

webteam

குளச்சல் மீன்பிடித் துறைமுகத்தில் குவிந்த கணவாய் மீன்களை கேரள ஏற்றுமதி நிறுவனங்கள் போட்டி போட்டு வாங்கியதால் 2 கோடி ரூபாய் அளவுக்கு மீன் வர்த்தகம் நடைபெற்றது.

கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் பொதுவாக விசைப்படகுகள் மூலம் ஆழ்கடல் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

நடுக்கடலில் சுமார் 7 நாட்கள் முதல் 15 நாட்கள் வரை தங்கி மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் விசைப்படகு மீனவர்கள் கணவாய் இரால் போன்ற ஏற்றுமதி ரக மீன்களை பிடிப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந்நிலையில், தற்போது குளச்சல் மற்றும் முட்டம் மீன்பிடித் துறைமுகங்களில் இருந்து ஆழ்கடல் மீன்பிடி தொழிலுக்கு சென்ற விசைப்படகு மீனவர்கள் அதிக அளவில் கணவாய் மீன்களுடன் கரை திரும்பினர்.

இதையடுத்து கரை திரும்பிய மீனவர்கள் கணவாய் மீன்களை விற்பனைக்காக துறைமுகத்தில் குவித்து வைத்திருந்த நிலையில், அந்த மீன்களை கேரளாவை சேர்ந்த ஏற்றுமதி நிறுவனங்கள் போட்டி போட்டு வாங்கிச் சென்றனர்.

இதனால், 1 கிலோ பீலி கணவாய் மீன் ரூ.200-க்கும் 1 கிலோ கட்டில் பிஷ் கணவாய் மீன்கள் ரூ.400-க்கும் விற்பனையானது. இதையடுத்து குளச்சல் மீன்பிடித் துறைமுகத்தில் இன்று ஒரே நாளில் 2 கோடி ரூபாய் அளவிற்கு மீன் வர்த்தகம் நடைபெற்றுள்ளதாக மீனவர்கள் தெரிவித்தனர்.