தமிழ்நாடு

களைகட்டும் குளு குளு வசந்த காலம் : கண்காட்சிக்கு தயாராகும் கொடைக்கானல்

webteam

தொடர் மழையால் கொடைக்கானலில் களைகட்டத் துவங்கும் குளு குளு வசந்த காலம், தொடர் மழையால் பூங்காவில் பூத்துகுலுங்கும் வண்ண வண்ண மலர்கள்.

தமிழகத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விட்டு இரண்டு வாரங்கள் ஆகியுள்ளது. ஆகவே பலரும் சுற்றுலா செல்லத் தொடங்கியுள்ளனர். அனைத்து தரப்பினரையும் சுற்றுலாவிற்கு ஈர்க்கும் வலையில் மலைகளின் இளவரசி என்றழைக்கப்படும் கொடைக்கானல் தயாராகி வருகிறது. அதிலும் பசுமையும்,வண்ணமும், இளமைப் பட்டாளங்களும் ஒருசேர சங்கமிக்கும் இடமாக இங்குள்ள பிரயண்ட் பூங்கா திகழ்கிறது.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதிகளில், கடந்த சில தினங்களாக கோடை மழை, மாலை வேளைகளில் பெய்யத்துவங்கியுள்ளது. கடந்த சில மாதங்களாக மலைப்பகுதிகளில் நிலவி வந்த வெப்பம், தொடரும் மழையால் முற்றிலும் தணிந்து, குளு குளு வசந்த கால சீசன் துவங்கியுள்ளது. மழையால், பிரயண்ட் பூங்காவில் நடவு செய்யப்பட்டுள்ள பல்வேறு வகையான மலர்ச்செடிகள் செழிக்கத்துவங்கி, வண்ண வண்ண மலர்கள் பூத்து குலுங்க துவங்கியுள்ளன. 

ரோஜா வகைகள், டெல்பீனியம், பிளாக்ஸ் உள்ளிட்ட பல்வேறு வகையான மலர்கள் பூத்து குலுங்கி சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகின்றன. எதிர் வரும் வாரங்களில், நடவு செய்யப்பட்டுள்ள அனைத்து மலர்ப்படுகைகளிலும், 300 வகைக்கும் அதிகமான மலர்கள் பூத்து குலுங்கி, மே மாதம் முதல் வாரத்தில், பூங்காவில் ஒரு கோடிக்கும் அதிகமான பூக்களை காணலாம், என பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.