ஆங்கில பேச்சு பயிற்சி முகநூல்
தமிழ்நாடு

பள்ளி மாணவர்களுக்கு ஆங்கில பேச்சு பயிற்சி... மேயர் பிரியா கொடுத்த அறிவிப்பு!

சென்னை மாநகராட்சியின் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த மேயர் பிரியா, கல்வித் துறை சார்ந்து 16 அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

PT WEB

சென்னை மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு நிபுணர்கள் மூலம் ஆங்கில பேச்சு பயிற்சி மற்றும் ஃபேஷன் டெக்னாலஜி பயிற்சி வழங்கப்படும் என மேயர் பிரியா அறிவித்துள்ளார்.

சென்னை மாநகராட்சியின் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த மேயர் பிரியா, கல்வித் துறை சார்ந்து 16 அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். மாநகராட்சி பள்ளிகளில் 10 முதல் 12ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களில் ஆர்வமுள்ளவர்களை தேர்ந்தெடுத்து, அரசு பணிகளுக்கான போட்டி தேர்வுகளில் கலந்துகொள்ள பயிற்சி வழங்கப்படும் என்றும், இதற்காக பள்ளிகளுக்கு 15 ஆயிரம் ரூபாய் முதல் ஒன்றரை லட்சம் ரூபாய் வரை ஊக்கத் தொகை வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலை பள்ளிகளில் மழலையர் வகுப்பறைகளில் மின்னணு பலகை நிறுவப்படும் எனவும், மேல்நிலைப் பள்ளிகளில் மின் துண்டிப்பு ஏற்படும் நேரங்களில் மாணவ-மாணவிகளுக்கு ஏற்படும் கற்றல் இடையூறை தவிர்க்க, ஜெனரேட்டர்கள் அமைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

141 உடற்கல்வி ஆசிரியர்கள் பணியமர்த்தப்படுவார்கள் எனவும் சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. மாநில அளவிலான விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கும் மாணவ-மாணவிகளுக்கு உணவு, போக்குவரத்து உதவிகள் வழங்கப்படும் என்றும், தடகள போட்டிகளில் பங்கேற்கும் மாணவ- மாணவிகளுக்கு ஷூ வழங்கப்படும் எனவும் மேயர் பிரியா அறிவித்துள்ளார்.