தமிழ்நாடு

அரசுப் பள்ளிகளில் ஆங்கிலப் பேச்சுத்திறன் பயிற்சி வகுப்புகள் அறிமுகம்

webteam

தமிழக அரசுப் பள்ளிகளில் 1 முதல் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆங்கிலப் பேச்சுத்திறன் பயிற்சி வகுப்புகளை பள்ளிக் கல்வித் துறை அறிமுகப்படுத்தியுள்ளது. 

தமிழக அரசு சில வருடங்களாகவே பள்ளிக் கல்வித்துறையில் அதிரடியான மாற்றங்களை புகுந்தி வருகிறது. 10 ஆம் வகுப்பு மற்றும் 12 வகுப்பு பொதுத்தேர்வுகள் முதல் மதிப்பெண், இரண்டாம் மதிப்பெண் என மதிப்பெண்ணை வைத்து தரம் பிரிப்பதை மாற்றி அமைத்தது. இந்த முறையால் மாணவர்கள் மனநிலை பாதிக்கப்படுவதாக விளக்கம் அளிக்கப்பட்டது. அதனை அனைத்து தரப்பினரும் வரவேற்றனர். இதை போலவே இப்போது ஆங்கில மொழியில் சரளமாக பேச வேண்டும் என்பதற்காக, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் கையேட்டை தயாரித்துள்ளது. 

இந்தக் கையேடுகள் ஏற்கனவே பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன. இந்த ஆங்கிலப் பேச்சுத்திறன் பயிற்சி 1 முதல் 5ஆம் வகுப்பு மாணவர்களின் 2ஆம் பருவத்தில் 12 பாட வேளைகளிலும், 6 முதல் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 30 பாடவேளைகளிலும் வழங்கப்படும். ஆங்கிலப் பேச்சுத்திறன் பயிற்சி சார்ந்த வகுப்புகளை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும், மாவட்டக் கல்வி அலுவலர்களும் கண்காணிக்க வேண்டும் என பள்ளிக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.