தமிழ்நாடு

ரஜினி கட்சி தொடங்காவிட்டால் ஆன்மிக அரசியல் தோற்றுவிடாது - சி.பி.ராதாகிருஷ்ணன்

kaleelrahman

ரஜினியின் அரசியல் அறிவிப்பு குறித்து பேசிய பாஜகவின் மூத்த தலைவரும் கேரள தேர்தல் பொறுப்பாளருமான சி.பி.ராதாகிருஷணன் பேசும்போது ரஜினி தன்னுடைய உடல்நிலையை கருத்தில் கொண்டு இந்த அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார். இதை விமர்சிக்கும் உரிமை மற்றவர்களுக்கு இல்லை என்று கூறினார்.

புதிய தலைமுறைக்கு அவர் அளித்த பேட்டியில், “ரஜினியின் அறிவிப்பு பாஜகவுக்கு அதிர்ச்சியை தரும் என்பது திருமாவளவனின் கருத்து. உண்மையிலேயே மிக அதிர்ச்சிக்கு உள்ளாகி இருந்தவர்கள் திமுக கூட்டணியினர்தான். அதனால் அவர்களுக்கு சிறு திருப்தி இருந்திருக்கக் கூடும். ஆனால் எங்களை பொருத்தளவில் அவர் கட்சி ஆரம்பிப்பதை நாங்கள் எதிர்க்கவில்லை.

அதே நேரத்தில் தமிழகத்தில் சிலபேர் கூப்பாடு போடுவதைப்போல அவர் ஒரு மராட்டியர், அதனால் அவர் இங்கே ஆட்சிக்கு வரக்கூடாது. அவர் இங்கே கட்சி தொடங்கக் கூடாது என்ற கருத்தையெல்லாம் ஏற்றுக்கொள்ளக் கூடியவர்கள் அல்ல நாங்கள்.

எல்லோரும் இந்தியர்கள் எல்லோரும் கட்சியை ஆரம்பிக்கின்ற உரிமை இருக்கிறது. அதுமட்டுமல்ல, ரஜினியை பொருத்தவரை அவர் தமிழ்நாட்டின் ஒரு அங்கம். அதிலே எந்த மாற்றுக் கருத்திற்கும் இடமில்லை. ஒரு நல்ல மனிதர் அதிலும் மாற்றுக் கருத்திற்கு இடமில்லை.

அவர் தன்னுடைய உடல்நிலையை கருத்தில் கொண்டு ஒரு அறிவிப்பை செய்திருப்பது அவருடைய சொந்த விருப்பம். இதை விமர்சிக்கின்ற உரிமை மற்றவர்களுக்கு இல்லையென்றே நான் கருதுகிறேன். ஆன்மிக அரசியல் என்பது, ஒரு சமுதாயத்திற்கு நல்லது. ஒரு தனி மனிதனின் விருப்பு வெறுப்புகளை, ஒரு தனி மனிதனுடைய முடிவுகளை நம்பி ஆன்மிக அரசியல் இருக்க முடியாது.

ரஜினிகாந்த் அவர்கள் ஆன்மிக அரசியலை ஆதரித்தது, ஆன்மிக அரசியலுக்கு மிகப்பெரிய வலுவை சேர்த்தது என்பதை யாரும் மறுக்க முடியாது. அதே நேரத்தில் ரஜினி அவர்கள் ஒரு இயக்கத்தை ஆரம்பிக்காத காரணத்தாலேயே ஆன்மிக அரசியல் தோற்றுவிடும் என்று சொல்வதும் அல்லது தோற்றுப் போய்விடும் என்று எதிர்பார்ப்பதும் அறிவுடைமை அல்ல.

அன்வர் ராஜாவை பொருத்தவரை அவர் எப்பொழுதுமே அதிமுகவை பிரதிபலிப்பதாக நாம் எடுத்துக் கொள்ளக் கூடாது. பல நேரங்களில் அவர் தலைமையின் கருத்துக்கு எதிராக பாஜக பற்றி கருத்துக்களை சொல்லியிருக்கின்றனர். ஆனால் என்னைப் பொருத்தவரை அன்வர் அண்ணன் குறிப்பிடுவது அவரது சொந்த விருப்பின் பேரிலே கருத்துக்களை தெரிவிக்கிறார்.

முனுசாமி பேசியதற்கு ஜெயக்குமார் பதில் சொல்லியிருக்கிறார்கள். பாஜக என்று எங்காவது முனுசாமி குறிப்பிட்டு இருக்கிறாரா என்று கேட்டிருக்கிறார். ஒரு அரசியல் இயக்கம் இன்னொரு அரசியல் இயக்கத்தோடு கூட்டணி சேருவது என்பது எந்த அடிப்படையில் என்று கேட்டால், அது கொள்கை அடிப்படையில் மட்டுமல்ல. அது அன்றைய சூழலில் ஒரு நல்லாட்சியைத் தொடர வேண்டும். அது மத்தியிலும் மாநிலத்திலும் நட்புடைய ஆட்சியாக இருந்தால் மாநிலத்தின் வளர்ச்சிக்கு நல்லது என்ற அடிப்படையிலே தான் அதிமுகவும், பாஜகவும் கூட்டணி சேர வேண்டுமென்று நாங்கள் கருதுகிறோம்” என்றார்.