மாற்றுத்திறனாளிகளில், பல வகையினர் உள்ளனர். அவர்களில் முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளும் ஒருவகையினர். இவ்வகையினர், உடலில் பல்வகை குறைபாடு கொண்டவர்கள். தமிழகத்தில், சுமார் 2,500 பேர் முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் உள்ளனர். இவர்களுக்காக செயல்படும் 'தண்டுவடம் காயமடைந்தோர் அமைப்பு' சார்பில், இன்று சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் செய்தியாளர் சந்திப்பு நடத்தப்பட்டது. அப்போது பல்வேறு கோரிக்கைகளை அவர்கள் அரசுக்கு வைத்தனர்.
"தமிழகத்தில் சுமார் 2500 பேர் முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் உள்ளனர். இவர்கள் மற்ற மாற்றுத்திறனாளிகள் போலல்லாமல், வாழ்க்கையில் பெரும் பகுதியை படுத்தே தான் கழிக்க முடியும். வெளியே செல்ல வேண்டும் என்றால்கூட, வீல்சேரில் தான் செல்ல வேண்டும். சிறுநீர், மலம் போன்றவைக்கூட இவ்வகையினரால் டியூப் மூலமாக தான் வெளியேற்ற முடியும். இந்த நிலையில் தற்போது அவர்களுக்கு பெரும் சவாலாக நிற்பது, படுக்கை புண் நோய். கடந்த இரண்டு ஆண்டுகளாக, கொரோனா பெருந்தொற்று காலம் நிலவிவருவதால், இவர்களை மருத்துவமனையில் அனுமதிப்பது முடியவில்லை.
இதனால் கடந்த ஆறு மாதத்தில் மட்டும் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் தற்போது 250 பேர், உயிருக்கு போராடிக் கொண்டிருக்கின்றனர். தமிழக அரசு விரைந்து, உடனடியாக இவர்களுக்கு மருத்துவ உதவி செய்ய வேண்டும். முன்னராக, இவர்கள் வெளியே செல்வதற்காக தமிழக அரசாங்கம் 75 ஆயிரம் செலவில் பேட்டரி சக்கர நாற்காலிகள் வழங்கியிருந்தது. மூன்று ஆண்டுகள் வாரண்டி உடன் வழங்கப்பட்ட அந்த நாற்கலிகளில், 80% தற்போது வரை பழுதான நிலையில் உள்ளது. அவற்றை சரி செய்ய, தமிழகம் முழுவதும் 6 சேவை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த முகவரியில் தேடிச் சென்று பார்த்தால் அப்படி ஒரு நிறுவனமே அங்கு இல்லை என்கிறார்கள். இந்த விவகாரத்தை அரசு சீரமைக்க வேண்டும்.
இந்த மாற்றுத்திறனாளிகளுக்கு, மாத உதவித்தொகையாக தமிழக அரசு 1,500 ரூ. வழங்கி வருகிறது. ஆனால் அந்த உதவித் தொகை அவர்களுக்கு போதாத நிலை உள்ளது. நம் அண்டை மாநிலமான ஆந்திராவை போல, ஐந்தாயிரம் வழங்கினால் மிகவும் உதவியாக இருக்கும்" என்று கூறி, தங்கள் கோரிக்கைகளை அரசுக்கு வைத்தனர்.
மேலும், தங்களை பல்வகை ஊனமுற்றவர்களாக அரசு அறிவிக்க வேண்டும் என்றும், ஒவ்வொரு மாவட்டத்திலும் 10 படுக்கைகளுடன் கூடிய செயல் இல்லங்களை அமைத்து தர வேண்டும் என்பதும் இவர்களுடைய மிக முக்கியமான கோரிக்கைகளாக இருக்கிறது.
- ஜோதி நரசிம்மன்