தமிழ்நாடு

ராமஜெயம் கொலைவழக்கு தொடர்பாக அமைச்சர் கே.என் நேருவிடம் விசாரணை - எஸ்பி தகவல்

Sinekadhara

ராமஜெயம் கொலைவழக்கு தொடர்பாக அமைச்சர் கே.என் நேரு, உறவினர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக சிறப்பு புலனாய்வு குழு எஸ்பி செய்தியாளர்களிடம் தெரிவித்திருக்கிறார். 

கடந்த 2012-ஆம் ஆண்டு மார்ச் 29ஆம் தேதி நடைப் பயிற்சிக்கு சென்ற ராமஜெயம் கடத்தி கொலை செய்யப்பட்டார். இக்கொலை வழக்கு தொடர்பாக தற்போது சிறப்பு புலனாய்வு பிரிவு விசாரணை மேற்கொண்டு வருகிறது. சிறப்பு புலனாய்வுப் பிரிவு எஸ்பி ஜெயக்குமார் செய்தியாளரிடம் பேசியபோது, ராமஜெயம் கொலைவழக்கு தொடர்பாக 198 பேரிடம் இதுவரை விசாரணை நடத்தப்பட்டுள்ளது. அதில் காவல் ஆய்வாளர், உதவி ஆணையர் உள்ளிட்ட 6 பேர் அடங்குவர். மேலும் அமைச்சர் கே.என் நேருவிடம் இரண்டு முறை நேரில் சென்றும் ராமஜெயத்தின் மகன் வினித், உறவினர் வினோத் உள்ளிட்டோரிடமும் விசாரணை நடத்தப்பட்டதாக எஸ்பி தெரிவித்தார்.

மேலும் நீதிமன்றத்தில் விரைவில் குற்றவாளிகளை பிடித்து விடுவோம் எனவும், இந்த வழக்குத் தொடர்பாக தொடர் விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டார். தற்பொழுது ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக தகவல்களை தருபவர்களுக்கு சன்மானமாக ரூபாய் 50 லட்சம் வழங்கப்படுமென எஸ்.பி ஜெயக்குமார் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

மேலும் ராமஜெயத்துடன் தொடர்பில் இருந்த அரசியல்வாதிகள், வியாபாரிகள் என அனைவரிடமும் விசாரணை நடத்தி உள்ளதாகவும், திருச்சி மட்டுமல்லாமல் சென்னை, மதுரை உள்ளிட்ட முக்கிய நகரங்களிலும் முக்கிய குற்றவாளிகளிடம் இவ்வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டுள்ளது எனவும், விரைவில் குற்றவாளிகளை பிடித்து விடுவோம் என்ற நம்பிக்கை 100% உள்ளதாகவும் சிறப்பு புலனாய்வு குழு எஸ்பி ஜெயக்குமார் தெரிவித்தார்.