தமிழ்நாடு

“குழந்தையை மீட்க சிறப்புக் கருவிகள் வருகின்றன” - அமைச்சர் விஜயபாஸ்கர்

“குழந்தையை மீட்க சிறப்புக் கருவிகள் வருகின்றன” - அமைச்சர் விஜயபாஸ்கர்

webteam

ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்க சிறப்புக் கருவிகள் வரவழைக்கப்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

திருச்சியில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை தொடர்பாக புதிய தலைமுறையிடம் தொலைபேசி வாயிலாக பேசிய விஜயபாஸ்கர், “குழந்தையை மீட்க சிறப்புக் கருவிகளை மதுரையில் இருந்து கொண்டுவர உத்தரவிட்டுள்ளோம். குழந்தையை மீட்ட உடனே சிகிச்சை அளிப்பதற்கு மருத்துவக் குழுக்கள், மருந்துகள் தயார் நிலையில் இருக்கின்றன. குழந்தை உயிருடன் மீட்கப்படும் வரையில் தமிழக அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுக்கும்” என்று தெரிவித்தார்.

முன்னதாக, திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் உள்ள ஆழ்துளை கிணற்றுக்குள் 2 வயது குழந்தை தவறி விழுந்தது. கிணற்றுக்குள் குழந்தையின் கைகள், கால்கள் மடங்கிய நிலையில் உயிருக்கு போராடி வருவது காண்போரை கலங்கச் செய்துள்ளது. குழந்தையை மீட்பதற்காக ஆழ்துளை கிணற்றுக்கு அருகாமையில் மீட்புக்குழுவினர் ஜே.சி.பி இயந்திரம் மூலம் குழி தோண்டி வருகின்றனர். குழந்தையை மீட்கும் பணியில் வருவாய்த்துறை அதிகாரியும் ஈடுபட்டுள்ளார். 

குழந்தை 26 அடியில் சிக்கியிருப்பது தெரியவந்துள்ளது. குழந்தை சுவாசிக்க தேவையான ஆக்ஸிஜன் கிடைக்கும் வகையில் உள்ளதால், குழந்தை நல்லபடியாக உள்ளது என அதிகாரிகள் கூறியுள்ளனர். குழந்தை மீட்கப்பட்ட உடனே சிகிச்சை அளிப்பதற்காக ஆம்புலன்ஸும், மருத்துவக்குழுவும் தயார் நிலையில் உள்ளன. குழந்தையை மீட்க துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் சிவராசு தெரிவித்துள்ளார். ஆழ்துளை கிணறு அமைத்த தனியார் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஆட்சியர் கூறியுள்ளார்.