வீட்டை விட்டு முதியோரை வெளியேற்றும் இளைஞர்கள் எவரும் நாளை நாமும் முதியோர் ஆவோம் என்று நினைப்பதில்லை. அப்படி இரு மகன்களாலும் கைவிடப்பட்ட ஒரு தாயின் கண்ணீர் வார்த்தைகள், எதி்ர்கால சந்ததியினரின் மனதை மாற்றுமென்ற நம்பிக்கையோடு, சர்வதேச முதியோர் தினத்தை புதியதலைமுறை கடைபிடிக்கிறது.
திருப்பூரைச் சேர்ந்த மூதாட்டி சரஸ்வதியின் தற்போதைய வசிப்பிடம் முதியோர் இல்லம். கணவர் இறந்த பின்னர், பெற்ற பிள்ளைகளும் கைவிட்ட நிலையில் அவரை அரவணைத்துக் கொண்டது முதியோர் இல்லம். குழந்தைகளோடும், உறவுகளோடும் வாழ்ந்த பெண், இன்றைக்கு ஒருவருமின்றி நிர்கதியாக நிற்கிறார். பிள்ளைகளுக்காக உழைத்து களைத்துப்போன உடலும், பிள்ளைகளை அவர் வளர்த்தெடுத்த நினைவுகளும் மட்டுமே சரஸ்வதியிடம் மீதமிருக்கிறது.
நமக்கும் நாளை முதுமை வரும் என்பதை உணர்ந்து, பெற்றோரை வெளியேற்றாமல் இருந்தாலே, சர்வதேச முதியோர் தினத்துக்கு சிறப்பு சேர்த்தாக இருக்கும் என்கின்றனர் முதியோர் இல்ல நிர்வாகிகள். பெற்ற பிள்ளைகளால் கைவிடப்பட்ட பலருக்கும், முதியோர் இல்லங்களே அடைக்கலம் அளித்து வருகின்றன என்பது உண்மைதான். ஆனால், எதிர்காலத்தில் இதுபோன்ற இல்லங்களுக்குத் தேவை ஏற்படக்கூடாது என்ற எண்ணமும், அங்கு வசிக்கும் முதியோரிடம் இருக்கிறது.