தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் facebook
தமிழ்நாடு

நெருங்கும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026.. மத்திய பட்ஜெட்டில் பொழியுமா சலுகை மழை?

மத்திய பட்ஜெட்டில் இந்த முறை தமிழ்நாட்டிற்கான அறிவிப்புகள் அதிகளவில் இடம்பெற வாய்ப்புள்ளதாக பார்க்கப்படுகிறது. இது குறித்த ஒரு தொகுப்பு.

PT WEB

தேர்தல் வரும் பின்னே...சலுகை மழை பொழியும் முன்னே என்பது அரசியல் அரிச்சுவடியில் இடம்பெற்றுள்ள தாரக மந்திரங்களில் ஒன்றாகி வருகிறது. கடந்தாண்டு பிகாரில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்ற நிலையில் அதற்கு முன் தாக்கலான மத்திய பட்ஜெட்டில் ஏராளமான அறிவிப்புகள் அம்மாநிலத்திற்கு என அறிவிக்கப்பட்டன. அவை தேர்தல் பரப்புரையிலும் முதன்மைப்படுத்தப்பட்டன. 2021ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்ற நிலையில் அப்போதும் தமிழ்நாட்டிற்கென பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டன.

பி.எம் மித்ரா

தமிழ்நாட்டில் முந்தைய சட்டப்பேரவைத் தேர்தல் நடந்த 2021 ஆண்டில், பிஎம் மித்ரா திட்டத்தின் கீழ் விருதுநகரில் மெகா ஜவுளிப்பூங்கா அறிவிப்பு வெளியானது. அதே ஆண்டில் கடலோரப்பகுதிகள் வளர்ச்சிக்காக கடற்பாசி பூங்கா அறிவிப்பும் வெளியானது. சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் 2ஆவது கட்டத்திற்கு நிதி ஒதுக்கீடும் அறிவிக்கப்பட்டது. 3 ஆயிரத்து 500 கிலோ மீட்டர் தொலைவுக்கு ஒரு லட்சத்து 3 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் நெடுஞ்சாலைகள் விரிவாக்க அறிவிப்பும் அப்போது வெளியானது. இதில் மதுரை - கொல்லம், சென்னை - சேலம், சென்னை - பெங்களூரு சாலைத் திட்டங்களும் அடங்கும். ஆசிய வளர்ச்சி வங்கி உதவியுடன் சென்னை - கன்னியாகுமரி தொழிற்வழித்தட திட்ட மேம்பாடு குறித்த அறிவிப்பும் அப்போது வெளியானது.

அதே ஆண்டு தேர்தல் நடந்த மேற்கு வங்கம், கேரளா, அசாம் ஆகிய மாநிலங்களுக்கு சாலை உள்ளிட்ட கட்டமைப்பு திட்டங்களுக்கு கணிசமாக நிதி ஒதுக்கப்பட்டது. தமிழகம், கேரளா, மேற்கு வங்காளம், அசாம் ஆகிய மாநிலங்கள் பலன்பெறும் வகையில் சுமார் அரை டஜன் அம்ரித் பாரத் ரயில்கள் கடந்த ஒரு மாதத்தில் புதிதாக விடப்பட்டதும் கவனம் பெறுகிறது. இதன் தொடர்ச்சியாக பட்ஜெட்டிலும் தமிழ்நாடு, மேற்கு வங்கம், கேரளா ஆகிய மாநிலங்களிலும் தேர்தலில் வாக்கு அறுவடை செய்வதற்காக சலுகை மழை பொழியுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது