தமிழ்நாடு

திருவாரூர்: விஜயதசமியை முன்னிட்டு சரஸ்வதி அம்மன் கோவிலில் சிறப்பு தரிசனம்

Sinekadhara

தமிழகத்திலேயே சரஸ்வதி அம்மனுக்காக திருவாரூர் மாவட்டத்தில் மட்டும்தான் தனியாக கோவில் உள்ளது. அந்த கோவிலில் இன்று விஜயதசமி நிகழ்ச்சி விமரிசையாக நடைபெற்றது.

நன்னிலம் வட்டம் கூத்தனூரில் அமைந்துள்ள சரஸ்வதி அம்மன் ஆலயத்திற்கு இன்று காலை முதலே பக்தர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் சரஸ்வதி அம்மனை வழிபட வருகை தந்தனர். கல்வி தெய்வமாக வணங்கப்படும் சரஸ்வதி கோவிலில் தாம்பூலத்தில் நெல்லைக் கொட்டி அதில் பிள்ளைகளை தங்கள் விரலால் உயிர் எழுத்துக்களை எழுதவைத்து அவர்கள் நல்ல முறையில் கல்வி பயிலவேண்டும் என பெற்றோர்கள் வழிபடுவர். திருவாரூர் மாவட்டம் மட்டுமின்றி வெளி மாவட்டங்களில் இருந்தும் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை அழைத்துவந்து கோவில் வளாகத்தில் சிலேட்டில் எழுத்துக்களை எழுத வைத்து அவர்கள் கல்வியில் நல்ல நிலைக்கு வரவேண்டும் என்று சரஸ்வதி அம்மனை வழிபட்டனர். 

வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் கோவிலுக்கு செல்ல பொதுமக்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டு இருந்ததால் இன்று அதிகமான பக்தர்கள் கூட்டம் வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. தடை நேற்றுதான் நீக்கப்பட்டதால் நேற்று ஆயுத பூஜை என்று பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை அழைத்துவந்து வழிபட்டு சென்று விட்டனர். ஆகவே நேற்றைவிட இன்று கூட்டம் சற்று குறைவாகத்தான் இருக்கிறது. பாதுகாப்பு பணியில் 20க்கும் மேற்பட்ட காவல்துறையினர் ஈடுபட்டிருக்கின்றனர். கொரோனா தொற்றின் காரணமாக கடந்த ஆண்டு கலையிழந்து காணப்பட்ட கலைமகள் கோவில் இந்த ஆண்டு சற்று களைகட்டியிருக்கிறது.