சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல வசதியாக தமிழகம் முழுவதும் இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
ஜனநாயகத்தின் மிகப் பெரிய திருவிழான தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறவுள்ளது. இதையொட்டி பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல சிறப்பு பேருந்துகள் இன்று முதல் வரும் 5-ஆம் தேதி வரை இயக்கப்படுகின்றன. சென்னையில் இருந்து 5 நாட்களுக்கு 14 ஆயிரத்து 215 பேருந்துகளும், கோவை, திருப்பூர், சேலம், பெங்களூரு நகரங்களில் இருந்து 2 ஆயிரத்து 644 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
ஏப்ரல் 4 மற்றும் 5 ஆம் தேதிகளில் மட்டும் பண்டிகை காலங்களைப் போன்று சென்னையில் 5 இடங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில், பயணிகளுக்கு உடல் வெப்பநிலை பரிசோதனையும், முகக்கவசம் அணிவதும் கட்டாயம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறப்பு பேருந்துளை 2 லட்சத்துக்கும் அதிகமானோர் பயன்படுத்துவர் என எதிர்பார்க்கப்படும் நிலையில், தமிழக சுகாதாரத்துறையும் பயணிகளுக்கான பாதுகாப்பு வசதிகளை மேற்கொள்கிறது.