தமிழ்நாடு

ஓபிஎஸ், ஈபிஎஸ் தனித்தனி அறிக்கை முதல் சசிகலா பேச்சு வரை : அதிமுகவில் நடப்பது என்ன?

ஓபிஎஸ், ஈபிஎஸ் தனித்தனி அறிக்கை முதல் சசிகலா பேச்சு வரை : அதிமுகவில் நடப்பது என்ன?

webteam

ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் சசிகலா முதலமைச்சராக பதவியேற்கவிருந்த சூழலில், ஓ.பன்னீர் செல்வம் தர்மயுத்தம் செய்தார். அதன்பின்னர் சொத்துகுவிப்பு வழக்கில் சிறை சென்றார் சசிகலா. இதனால் அவரின் வழிகாட்டுதலுடன் முதல்வராக பதவியேற்றார் எடப்பாடி பழனிசாமி. அதன்பின் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இணைந்து சசிகலாவையே கட்சியை விட்டு ஓரங்கட்டினர். இந்த சூழலில்தான் நான்கு ஆண்டு சிறைதண்டனை முடிந்து பிப்ரவரியில் விடுதலையானார் சசிகலா. தொடர்ந்து தீவிர அரசியலில் ஈடுபடுவேன் என பரபரப்பு காட்டிய சசிகலா தேர்தல் அறிவிப்பு வெளிவரவிருந்த சூழலில் அரசியலில் இருந்து ஒதுங்கிக் கொள்வதாக கடந்த மார்ச் 3ஆம் தேதி அறிவித்தார். அதிலிருந்து மௌனம் காத்து வந்த சசிகலா தேர்தல் முடிவுகளுக்கு பின்னர் சமீபகாலமாக மூத்த பத்திரிக்கையாளர்களையும், முக்கிய பிரமுகர்களையும் சந்தித்து வருவதாக தகவல் வெளியாகின. அத்துடன் அதிமுகவின் தோல்வியையும், அமமுகவின் படுதோல்வியையும் ஆராய்ந்தும் வருகிறார்.

இந்த சூழ்நிலையில்தான் தொண்டர் ஒருவருக்கு தொலைபேசி வாயிலாக சசிகலா பேசும் ஆடியோ வெளியாகி இருக்கிறது, அதில் "நீங்கள் கவலைப்படாமல் இருங்கள். நான் நிச்சயம் வருவேன். கட்சியை சரிசெய்துவிடலாம்" என்று பேசும் சசிகலா, கொரோனா மிக மோசமாக இருக்கக்கூடிய காரணத்தால் குடும்பத்தாரை மிக கவனமுடன் இருக்குமாறு அவரது ஆதரவாளருக்கு அறிவுரை சொல்லுகிறார். 

இதுகுறித்து பேசிய அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கேபி முனுசாமி "அதிமுகவை திசைதிருப்பி தொண்டர்களைக் குழப்ப முயற்சிக்கிறார் சசிகலா. அதிமுக தொண்டர் யாருமே அவரிடம் பேசவில்லை. அவர் பேசுவதை அமமுகவினரிடம்தான். சசிகலாவின் எண்ணம் ஈடேறாது. அவரது குடும்பம் அதிமுகவிலிருந்து விலகி இருந்தால் தான் ஜெயலலிதாவின் ஆன்மா சாந்தி அடையும்" என்று தெரிவித்தார். 

இது குறித்து பத்திரிகையாளர் ப்ரியன் பேசுகையில் "அதிமுகவின் இரட்டை தலைமையை மக்கள் ஏற்கவில்லை. அதிமுக தலைமை பொறுப்பில் இருந்து ஓரம்கட்ட பெற்றுள்ளார் எடப்பாடி பழனிசாமி. அப்போது எடப்பாடி பழனிசாமியிடம் பதவியும் அதிகாரமும் இருந்தது. அதனால் கட்சி நிர்வாகிகளும் அமைச்சர்களும் எடப்பாடி பழனிச்சாமி பக்கம் இருந்தனர். தற்போது எடப்பாடி பழனிசாமி தோல்வியை சந்தித்து உள்ளார். 

கண்ணியமான தோல்வி என மழுப்பலான பதில் தேவையில்லை.‌ தோல்விக்கு பொறுப்பேற்க வேண்டும். நாடாளுமன்ற தேர்தலிலும் சட்டமன்றத் தேர்தலிலும் எடப்பாடி தலைமையிலான அதிமுக தோல்வியை சந்தித்துள்ளது. இதற்கு யார் பொறுப்பு? இரண்டு தேர்தல்களில் எடப்பாடி பழனிசாமியை மக்கள் ஏற்கவில்லை. தற்போது அவர் எதிர்க்கட்சித் தலைவராக இருப்பதற்கு காரணம் கொங்கு பகுதியில் அதிக அளவில் அதிமுக எம்.எல்.ஏக்கள் உள்ளனர். 

ஓபிஎஸ் கட்சியில் இருந்து ஓரங்கட்ட பட்டுள்ளார். எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சர் வேட்பாளராகவும் எதிர்க்கட்சித் தலைவராகவும் ஆனதை ஓபிஎஸ்  ஏற்கவில்லை. ஆனால் அவரை வற்புறுத்தியே சம்மதிக்க வைத்தனர். ஓபிஎஸ் இபிஎஸ் இடையே ஏற்றத் தாழ்வுகள் இருக்கின்றன. மன வருத்தங்கள் இருக்கின்றன. அதனால்தான் இருவரும் தன் இருப்பைக் காட்டிக்கொள்ள தனித்தனியே அறிக்கை வெளியிட்டு வருகின்றனர். அதிமுகவிற்கு இரட்டை தலைமை என்பது சரி வராது. ஒற்றை தலைமை தான் சரியாக இருக்கும். இந்த நிலையில்தான் சசிகலா தொண்டரோடு உரையாடி இருக்கிறார். அமமுக தொண்டனும் ஜெயலலிதாவின் விசுவாசிதான்.

சசிகலாவும் ஜெயலலிதாவுடன் இருந்து பழகிய விசுவாசி தான். தற்போது அதிமுகவில் இருப்பவர்களும் ஜெயலலிதாவின் பெயரையே உபயோகிக்கின்றனர். எனவே யாரையும் குறைத்து மதிப்பிட முடியாது. சசிகலாவை விலக்கி வைத்தது போன்று முனுசாமி பேசக்கூடாது. ஏனென்றால் அவரும் 2016 ஆம் ஆண்டு தேர்தலில் ஜெயலலிதாவால் ஒதுக்கி வைக்கப்பட்டவர்கள். பின்னர் அவர் எப்படி கட்சிக்கு வந்தார்? எனவே முனுசாமி தொடர்ந்து இதே போன்ற பேசிக்கொண்டிருந்தால் அதிமுக அகல பாதாளத்திற்கு செல்லும்.

சசிகலா வந்தால் அதிமுகவை தூக்கி நிறுத்தி விடுவார் என்று நான் சொல்ல வரவில்லை. ஆனால் ஒன்றைத் தலைமையே கட்சியை மேல் நோக்கி வழிநடத்தும். அது யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். தற்போது கொரோனா காலம் என்பதால் அதிமுக தொண்டர்கள் அமைதி காத்து வருகின்றனர். நிலைமை சரியானதும் மீண்டும் அதிமுகவில் ஒரு பூகம்பம் வெடிக்கும். ஒற்றை தலைமையை நோக்கி அதிமுக செல்லும்" என்று தெரிவித்தார்.