தமிழ்நாடு

எளியவனான என்னை உயர் பதவியில் அமர்த்தியவர் ஜெயலலிதா... சபாநாயகர் தனபால்

webteam

ஆதி திராவிட அருந்ததி சமுதாயத்தை சேர்ந்த, இந்த எளியவனை மிக உயர்ந்த பதவியில் அமர்த்தி ஒடுக்கப்பட்டுள்ள சமுதாயத்தின் விடிவெள்ளியாக திகழ்ந்தவர் ஜெயலலிதா என்று சட்டப்பேரவையில் சபாநாயகர் தனபால் தெரிவித்தார்.

தமிழக சட்டப்பேரவையில் இன்று காலை நடைபெற்ற சம்பவங்களை மறந்துவிடலாம் என்று நினைத்துக் கொண்டிருந்த நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் நான் நீலிக் கண்ணீர் வடிப்பதாக சட்டப்பேரவைக்கு வெளியே புகார் கூறியுள்ளார். இதனால் வேதனையுடன் ஒருசில விஷயங்களை தெரிவித்துக் கொள்ள விரும்புவதாக தனபால் கூறினார்.

மிக மிக தாழ்த்தப்பட்ட, சாமானிய எளிய குடும்பத்தில் இருந்த தன்னை பள்ளத்தில் இருந்து தூக்கி தொடர்ந்து 2-ஆவது முறையாக இப்பதவியில் அமர்த்தியது ஜெயலலிதா தான் என அவர் கூறினார்.

மேலும் அவர் கூறியதாவது:-

சுதந்திர இந்தியாவில் தாழ்த்தப்பட்ட ஆதி திராவிட அருந்ததி சமுதாயத்தை சேர்ந்த, இந்த எளியவனை மிக உயர்ந்த பதவியில் அமர்த்தி ஒடுக்கப்பட்டுள்ள சமுதாயத்தின் விடிவெள்ளியாக திகழ்ந்தவர் ஜெயலலிதா. அவ்வாறு ஒடுக்கப்பட்ட சமுதாயத்தில் இருந்து வந்த நான், அவை விதிகளுக்கு கட்டுப்பட்டு ஜனநாயக மரபுகளை கடைபிடித்து பேரவையை நடத்தியதால் தான் மீண்டும் இந்த பதவி வழங்கப்பட்டது. ஆனால் இங்கே திமுக உறுப்பினர்கள் தனிப்பட்ட முறையில் என் மீது தாக்குதலை நடத்தியிருந்தால் கூட கவலைபட மாட்டேன். பேரவைத் தலைவர் முறையில் நான் பணியாற்றுகையில் அந்த பதவிக்கு மரியாதை தராமல், நான் சார்ந்த சமுதாயத்தை இழிவுபடுத்தும் விதமாக அவர்கள் நடந்துகொண்டது அவர்கள் திட்டமிட்டு நடத்திய நாடகமாகவே கருதுகிறேன்.

ஒடுக்கப்பட்ட ஆதிதிராவிட இன மக்களை அடக்கிவிடலாம், இந்த சமூகம் வளரக் கூடாது என நினைத்து திமுக-வினர் செயல்பட்டு இருப்பாராயின் உண்மையில் நான் சாந்துள்ள சமுதாயத்தின் சார்பில் தனபால் என்னும் தனிமனிதனாக அதனை என்றென்றும் எதிர்க்க கடமைப்பட்டிருக்கேன்.

சுதந்திரம் பெற்று, 69 ஆண்டுகளுக்கு பின்னும் இந்த சமூகம் முன்னுக்கு வரக் கூடாது. இந்த சமுதாயத்தில் இருப்பவர்கள் யாரும் உயர்பதவியில் இருக்கக் கூடாது என்ற எண்ண ஓட்டத்தின் வெளிப்பாடகவே இங்கே நடைபெற்ற குழப்பத்தை கருதுகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.