மருத்துவப்படிப்புக்கான நீட் விலக்கு மசோதா, ஆளுநரால் திருப்பி அனுப்பப்பட்ட நிலையில், இன்று அதுகுறித்த சட்டப்பேரவை சிறப்புக்கூட்டம் மீண்டுமொருமுறை கூடியது. இக்கூட்டத்தில் நீட் விலக்கு மசோதாவை திருப்பியனுப்பியது தொடர்பான ஆளுநரின் விளக்கக் கடிதத்தை, இன்று நடைபெற்ற சிறப்பு சட்டப்பேரவை கூட்டத்தில் சபாநாயகர் அப்பாவு முழுமையாக வாசித்தார்.
உயிரியல், வேதியியல், இயற்பியலுக்கு மட்டுமே மாநில பாடத்திட்டம் முக்கியத்துவம் கொடுக்கிறது என ஆளுநர் குறிப்பிட்டிருப்பதை குறிப்பிட்ட சபாநாயகர் அப்பாவு, “இந்தக் கடிதம் வெளியில் கசிந்தது உகந்ததல்ல” என்றார்.
இதுகுறித்து அவர் விரிவாக பேசுகையில், “நீட் தேர்வு விலக்கு கோரியதற்கு ஆளுநர் அளித்த பதில் கடிதத்தை பொதுவெளியில் வெளியிட்டது உகந்ததா என உரியவர்கள் என்ணி உணர வேண்டும். ஏனெனில் பேரவையினால் இயற்றப்பட்ட ஒரு சட்டமுன்முடிவு, ஆளுநரால் நிராகரிக்கப்பட்டு மறு ஆலோசனைக்கு உட்படுகிறது என்கையில் அது பொதுவெளிக்கு அனுப்பப்படாது.
நேரடியாக அறிக்கை சபாநாயகர் என்ற முறையில், எனக்கு மட்டும் தனிப்பட்ட முறையில் அனுப்பப்பட்டது. என் தரப்பிலிருந்து அது பேரவை உறுப்பினர்களுக்கு மட்டுமே நகல் அனுப்பப்பட்டது. வேறு யாருக்கும் இதுகுறித்து தெரியாது. பேரவை தரப்புக்கு மட்டுமே இது தெரியப்பட வேண்டும் என்றே நான் நினைத்தேன். இப்படி பேரவைக்கு ஆளுநர் மாளிகையிலிருந்து அனுப்பப்பட்ட ஒரு கடிதத்தை, பொதுவெளியில் வெளியிட்டு விவாதத்துக்கும் போராட்டத்துக்கும் வித்திட்டது ஏற்புடையதாகுமா என்பதை, இவ்விஷயத்தில் சம்பந்தப்பட்டோர் யோசித்து பார்க்கவும்.
இதேவிஷயத்தில், தமிழ்நாடு பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு ஆளுநர் மாளிகைக்கு அனுப்பப்பட்ட சட்டமுன்முடிவை பொதுவெளியில் வெளியிட்டது குறித்தும் கேள்வி கேட்கப்படலாம். பேரவையால் ஒருமனதாக நிறைவேற்ற பரிந்துரையை, ஆளுநர் மாளிகை காலதாமதப்படுத்தி பார்க்கையில் அதுகுறித்து அரசியல் கட்சிகளும், சம்பந்தப்பட்ட பிரச்னையினால் பாதிக்கப்பட்டவர்களும் பொதுவெளியில் வெளியிடவோ விவாதிக்கவோ ஜனநாயக ரீதியாக உரிமை உண்டு. இவ்விஷயத்தில் பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்டமுன்முடிவை இயன்றளவில் விரைந்து பார்க்கவேண்டுமென்பது, பொருள்.
அதை ஆளுநர் மாளிகை செய்யாமல் இருந்ததை சுட்டிக்காட்டும் விதமாக, பேரவை தலைவர் என்ற முறையில், நானே ஆளுநர் தரப்புக்கு `இயன்றளவு விரைவில் என்றால் இதுதானா? இது சரிதானா? எண்ணிப்பார்க்கவேண்டும்’ என கேட்கிறேன். இந்த விஷயத்தில் என்னை பொறுத்தவரை எனது பொறுப்பிலிருந்து கடுகளவும் தவற மாட்டேன் என்பதை உறுதியாக தெரிவித்துக்கொள்கிறேன்” என்றுகூறி, நீட் விலக்கு மசோதா குறித்த பேரவை உறுப்பினர்களின் விளக்க உரைகளுக்கு சபாநாயகர் அப்பாவு அனுமதியளித்தார்.
தொடர்புடைய செய்தி: நீட் விலக்கு மசோதாவை திருப்பி அனுப்பியது ஏன்? ஆளுநர் ஆர்.என்.ரவியின் விரிவான விளக்கம்
அதற்கு முன்னராக, சபாநாயகர் அப்பாவு “ஆளுநர் குறித்து பேரவையில் விமர்சனம் செய்யக்கூடாது என முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆட்சிக்காலத்தில் முடிவெடுக்கப்பட்டது. அதன்படி, இக்கொள்கையின் கீழ் இந்த அரசிலும் இன்றைக்கு எவ்வித விமர்சனமும் வைக்கக்கூடாது என்று கேட்டுக்கொள்கிறேன். குறிப்பிட்ட அந்த செய்தி உரை மற்றும் சட்ட முன்முடிவு குறித்த காரணத்தை மட்டும் பேசலாம். சட்டமன்ற பேரவை விதி 92 (6, 7) அதன்கீழ், குடியரசு தலைவர் அல்லது ஆளுநர் அல்லது நீதிமன்றம் ஒன்றின் நடத்தைக்கு களங்கம் கற்பிக்கும் வகையிலோ, விவாதத்துக்கு வழிவகுக்கும் வகையின்கீழ் பேசக்கூடாது என கேட்டுக்கொள்கிறேன்” என பேரவை உறுப்பினர்களிடம் கேட்டுக்கொண்டார்.