velumani and annamalai
velumani and annamalai pt
தமிழ்நாடு

"சமூக வலைதளங்களில் அரசியல் செய்கிறார் அண்ணாமலை; களத்தில் ஒன்றும் இல்லை" - எஸ்.பி வேலுமணி காட்டம்!

PT WEB

செய்தியாளர் - பிரவீண்

கோவை மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளர் சிங்கை ராமசந்திரனுக்காக, டவுன்ஹால் பகுதியில் உள்ள புனித மைக்கேல் தேவாலயத்தில் மறை மாவட்ட ஆயர் தாமஸ் அக்குவினாஸை சந்தித்து முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ஜுனன் ஆதரவு கோரினர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எஸ்.பி.வேலுமணி, “கோவை தொகுதியில் ராமச்சந்திரனின் வெற்றி பிரகாசமாக இருக்கிறது. மூன்றாண்டு கால ஆட்சியில் திமுக கோவைக்கு எந்த திட்டமும் கொண்டு வரவில்லை. மத்தியில ஆளுகின்ற பாஜகவும், அதன் மாநில தலைவரும் பல்வேறு வாக்குறுதிகளை அளித்திருந்தாலும், இதுவரை எதுவும் செய்யாததால் திமுக கொடுத்த வாக்குறுதி போல்தான் அண்ணாமலை கொடுத்த வாக்குறுதியும் இருக்கிறது. கோவை மாவட்டத்தை மிகப்பெரிய வளர்ச்சிக்கு கொண்டு சென்றதும் பல்வேறு திட்டங்களை கொண்டு வந்ததும் அதிமுகதான் என்பது மக்களுக்கு தெரியும். எனவே அதிமுக வேட்பாளர்களின் வெற்றி உறுதியாக இருக்கிறது.

நாங்கள் மக்களை நம்பி நிற்கிறோம். திமுகவினர் பணத்தை நம்பி நிற்கின்றனர். அண்ணாமலை செய்தியாளர்களிடமும் சமூக வலை தளங்களிலும்தான் அரசியல் செய்து வருகிறார். களத்தில் ஒன்றும் இல்லை. அதிமுகவை ஒழிப்போம், எடப்பாடியை ஒழிப்போம் என்று பேசி வருகிறார் அண்ணாமலை. நாங்கள் மக்களுக்கு நல்லது செய்துள்ளோம். பல்வேறு திட்டங்களை அளித்து மக்களோடும் மக்களாக இருக்கின்றோம்.

38 எம்பிக்களை கொண்டும் திமுக எதுவுமே செய்யவில்லை. காவிரி மேலாண்மை வாரியம் விவகாரத்தில் நாடாளுமன்றத்தை முடக்கி தமிழ்நாட்டு உரிமையை மீட்டெடுத்தவர் எடப்பாடி பழனிசாமி. இது மட்டுமின்றி இலங்கை தமிழர் பிரச்னை, இட ஒதுக்கீடு என அனைத்தையும் மீட்டெடுத்தது அதிமுகதான்” என்று கூறினார்.