தெனாலியின் பயப் பட்டியலை விட அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் பயப் பட்டியல் பெரியதாக இருப்பதாக அமைச்சர் கே. என்.நேரு காட்டமாக விமர்சித்திருந்தார். அமைச்சர் கே.என். நேரு வெளியிட்டிருந்த அறிக்கையில் பாஜகவோடு கள்ளக்கூட்டணி வைத்திருக்கும் அதிமுக, அதனை மணிக்கொரு முறை நிரூபிப்பதாக குறிப்பிட்டிருந்தார்.
அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட திமுகவுக்கு எதிரான தீர்மானங்களில் கண்டனம் என்றும் மத்திய அரசுக்கு எதிரான தீர்மானங்களில் வலியுறுத்தல் என குறிப்பிட்டு பாஜக பாசத்தை இபிஎஸ் வெளிப்படுத்துவதாக கே.என்.நேரு தெரிவித்து இருந்தார்.
எடப்பாடி பழனிசாமிக்கு மோடி என்றால் பயம், அமித்ஷா என்றால் பயம், அமலாக்கத்துறை, சிபிஐ, வருமானவரித்துறை, ஆளுநர், ரெய்டு, சின்னம் பறிபோய்விடுமோ என்று எடப்பாடி பழனிசாமியின் பயப்பட்டியல் சீனப் பெருஞ்சுவர் போல நீள்வதாகவும் அமைச்சர் கே.என். நேரு விமர்சித்தது அரசியல் களத்தில் பேசுபொருளானது.
இந்நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி அமைச்சர் கே.என்.நேருவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அதிமுகவின் தீரமிகு எழுச்சியால் பயந்துபோய் அமைச்சர் கே.என்.நேரு அறிக்கை விட்டிருக்கிறார். அதிமுகவைப் பார்த்து பயம் என்ற சொல்லை திமுக பயன்படுத்துவது வேடிக்கையின் உச்சம். தெனாலி பட வசனத்தை மேற்கோள்காட்டிய நேருவுக்கு நீர், மேகதாது, ரெய்டு என்றால் பயம். அரசியல் ரீதியாக இபிஎஸ்ஸை எதிர்க்க முடியாமல் தனிமனித தாக்குதல் நடத்தப்படுகிறது” என எஸ்பி வேலுமணி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பான கூடுதல் தகவலை இந்த வீடியோ தொகுப்பில் காணலாம்..