மார்ச் 1ம் தேதி முதல் 6 மாதத்திற்கு சோதனை முறையாக பயணிகள் முன்பதிவு பட்டியல் ஒட்டப்படாது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
ரயில்வே துறையில் காகிதப் பயன்பாட்டையும், அதன்மூலம் ஏற்படும் செலவையும் குறைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி பயணிகள் முன்பதிவு இருக்கைகள் மற்றும் படுக்கைகள் ஒதுக்கீடு விவரங்கள் அடங்கிய பட்டியலை காகிதங்களில் ரயில்களில் ஒட்டாமல், டிஜிட்டல் முறைக்கு மாறும் முயற்சியில் தெற்கு ரயில்வே ஈடுபட்டுள்ளது.
இது தொடர்பாக தெற்கு ரயில்வே இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெற்கு ரயில்வே, வரும் மார்ச் 1-ம் தேதி முதல் ரயில்களில் பயணிகளின் முன்பதிவு பட்டியல் ஒட்டப்படாது என அறிவித்துள்ளது.. இது 6 மாதங்கள் சோதனை அடிப்படையில் அமல்படுத்தப்படுவதாக கூறப்பட்டுள்ளது.
டிஜிட்டல் முறையில் பயணிகள் பதிவுகள் குறித்து அறிவிப்பதன் மூலம், வருடத்திற்கு 28 டன் பேப்பர்கள் மற்றும் ரூ.1,70,000 செலவு தவிர்க்கப்படுவதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய முறைப்படி ஏ1, ஏ மற்றும் பி கிரேடு ரயில் நிலையங்களில் இருந்து புறப்படும் எக்ஸ்பிரஸ் ரயில்களில் அடுத்த 6 மாதங்களுக்கு பயணிகள் முன்பதிவு குறித்த அறிக்கை ஒட்டப்படாது. அதற்கு பதிலாக எஸ்.எம்.எஸ் மூலம் மட்டுமே பயணிகளுக்கு விவரங்கள் அனுப்பப்படும்.