கேட்கீப்பர்கள் பணிநீக்கம் புதிய தலைமுறை
தமிழ்நாடு

பணியின்போது உறக்கம் - 2 கேட்கீப்பர்கள் பணிநீக்கம்!

பள்ளி வேன் மீது ரயில் மோதிய இந்த விபத்துக்கு கேட்கீப்பர் தூங்கியதே காரணம் என்ற புகார் எதிரொலித்த நிலையில், பணியின்போது தூங்கிய 2 கேட் கீப்பர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

ஜெனிட்டா ரோஸ்லின்

கடலூரில், ரயில்வே கேட்டைக் கடக்க முயன்ற பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில், பள்ளி வேன் நசுங்கி சுமார் 50 அடி தூரத்துக்கு இழுத்து செல்லப்பட்டதில், ஒரு மாணவி மற்றும் இரண்டு மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்து சம்பவத்தை அடுத்து, ரயில்வே கேட்டை மூடாமல் இருந்த கேட் கீப்பர் பங்கஜ் சர்மா பணியிடை நீக்கம் செய்யப்பட்டதுடன், கைது செய்யப்பட்டார்.

இதனையடுத்து , செம்மங்குப்பம் ரயில்வே கேட் கீப்பராக ஆனந்தராஜ் நியமிக்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக பல்வேறு கட்ட விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. மேலும், ரயில்வே கேட்களில் இருக்கும் கேட் கீப்பர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்ற வழிகாட்டு நெறிமுறைகளை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது. மேலும், ரயில்வே கேட் கீப்பர் அறையில் கண்காணிப்பு கேமராக்கள் பொறுத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்தவகையில், பள்ளி வேன் மீது ரயில் மோதிய இந்த விபத்துக்கு கேட்கீப்பர் தூங்கியதே காரணம் என்ற புகார் எதிரொலித்த நிலையில், பணியின்போது தூங்கிய 2 கேட் கீப்பர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், அரக்கோணம் - செங்கல்பட்டு வழித்தடத்தில் பணியின்போது தூங்கியதாக 2 கேட்கீப்பர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து ரயில்வேக்கு புகார்கள் சென்றன. இதை எடுத்து ரயில்வே நிர்வாகம் அவர்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளது. இதில், அரக்கோணம் - செங்கல்பட்டு வழித்தடத்தில் உள்ள 44-ஆவது ரயில்வே கிராசிங்கில் பணியில் இருந்த கார்த்திகேயன் மற்றும் 40-ஆவது ரயில்வே கிராசிங்கில் பணியில் இருந்த ஆஷிஷ் குமார் ஆகிய இருவரை டிஸ்மிஸ் செய்து தெற்கு ரயில்வே உத்தரவிட்டது.