தமிழ்நாடு

பொள்ளாச்சி வழித்தடத்தில் 10ம் தேதி முதல் முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கம்

பொள்ளாச்சி வழித்தடத்தில் 10ம் தேதி முதல் முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கம்

JustinDurai
கோவை போத்தனுார் - பொள்ளாச்சி வழித்தடத்திலும், பொள்ளாச்சி - பாலக்காடு இடையேயும் வரும், 10ம் தேதி முதல் முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
போத்தனுார் - பொள்ளாச்சி இடையே, 40 கி.மீ., அகல ரயில் பாதையில் தற்போது மின்மயமாக்கல் பணிகள் முடிவடைந்துள்ளன. போத்தனுார் - பொள்ளாச்சி வழித்தடத்தில், 17 மாதங்களுக்கும் மேலாக ரயில்கள் இயக்கப்படவில்லை. பயணிகளின் நீண்ட நாள் கோரிக்கைக்குப் பின் தற்போது, கோவையில் இருந்து போத்தனுார், பொள்ளாச்சி வழியாக பழையபடி ரயில்சேவை துவங்கப்படுகிறது.கோவையில் இருந்து, வரும் 10ம் தேதி முதல் தினமும் மதியம், 2:10 மணிக்கு புறப்படும் முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் (06463), போத்தனுார், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, கோமங்கலம், உடுமலை ஸ்டேஷன்கள் வழியாக மாலை, 4:40 மணிக்கு பழநி அடைகிறது. பழநியில் இருந்து, 11ம் தேதி முதல் காலை, 11:15க்கு புறப்படும் ரயில் (06462), மதியம், 2 மணிக்கு கோவை அடைகிறது.
பழநியில் இருந்து 10ம் தேதி முதல், தினமும் மாலை 4:45 மணிக்கு புறப்படும் ரயில் (06479), இரவு 7:40 மணிக்கு மதுரை அடைகிறது. மதுரையில் இருந்து, 11ம் தேதி முதல் தினமும் காலை, 7:20க்கு புறப்படும் ரயில் (06480), காலை, 10:10க்கு பழநி அடைகிறது. கோவையில் இருந்து வரும் 13ம் தேதி முதல் தினமும் மாலை, 6:15க்கு புறப்படும் முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ் ரயில் (06419), போத்தனுார், கிணத்துக்கடவு வழியாக இரவு, 7:45க்கு பொள்ளாச்சி அடைகிறது. பொள்ளாச்சியில் இருந்து, 14 முதல் காலை, 7:25க்கு புறப்படும் ரயில்(06420) காலை, 8:40க்கு கோவை செல்கிறது. பாலக்காட்டில் இருந்து வரும், 14ம் தேதி முதல் காலை, 4:55க்கு புறப்படும் ரயில் (06731) பாலக்காடு டவுன், புதுநகரம், கொல்லங்கோடு, முதலமடை, மீனாட்சிபுரம் வழியாக காலை, 6:30க்கு பொள்ளாச்சி வந்தடைகிறது. பொள்ளாச்சியில் இருந்து வரும், 13ம் தேதி முதல் இரவு, 8:50க்கு புறப்படும் ரயில்(06732), 10:30க்கு பாலக்காடு அடையும் என, தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.