ஏப்ரல் 2ஆம் தேதி முதல் டிக்கெட் கவுண்ட்டர்களில் டிக்கெட் பயணச்சீட்டு வாங்குபவர்களுக்கு, கட்டணத்தில் 5 சதவிகிதம் தள்ளுபடி செய்யப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
தற்போதைய காலகட்டத்தில் பலரும் இணையதளம் மூலமாகவே ரயில் டிக்கெட்டை முன்பதிவு செய்கின்றனர். இதனால் ரயில்வே டிக்கெட் கவுண்டர்கள் பல இடங்களில் வெறிச்சோடி காணப்படுகின்றன. இந்நிலையில், கவுண்ட்டரில் டிக்கெட் வாங்குபவர்களை ஊக்குவிக்கும் வகையில் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளதாக தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.
அதன்படி, முன்பதிவு கவுண்ட்டர்களில் நூறு ரூபாய்க்கும் மேல் கட்டணம் உள்ள பயணச்சீட்டை வாங்குபவர்களுக்கு, கட்டணத்தில் 5 சதவிகிதம் தள்ளுபடி செய்யப்படும். அதிகபட்சமாக 50 ரூபாய் வரை தள்ளுபடி செய்யப்படும் எனவும் மூன்று மாதங்களுக்கு சோதனை முறையில் இந்தச் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.