தென்மேற்கு பருவமழை வரும் ஜுன் 6ஆம் தேதி முதல் கேரளாவில் பெய்யத் தொடங்கும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வழக்கமாக ஜுன் முதல் தேதி கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என்றும், இம்முறை அது 5 நாட்கள் தாமதமாகும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் அந்தமான் நிகோபார் கடல் பகுதியில் வரும் 18 அல்லது 19ம் தேதிகளில தென் மேற்கு பருவமழை தொடங்க வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் கூறியுள்ளது.
கடந்த 2 ஆண்டுகளாக வானிலை மையம் கணித்த அதே தேதியில் கேரளாவில் பருவமழை தொடங்கியது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, ஸ்கைமெட் என்ற தனியார் வானிலை மையம் வரும் ஜுன் 4ம் தேதி மழை தொடங்க வாய்ப்புள்ளதாக கூறியிருந்தது. தென் மேற்கு பருவ மழைக்காலத்தில் தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்கள் பலன் பெறும். இம்மாவட்டங்களில் தற்போது நிலவும் கடும் வறட்சியை இந்த பருவமழை முடிவுக்கு கொண்டு வரும் என மக்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.