தமிழ்நாடு

தனி அதிகாரி நியமனத்தை எதிர்த்து நடிகர் சங்கம் உயர்நீதிமன்றத்தில் மனு

rajakannan

தனி அதிகாரியை நியமித்த தமிழக அரசாணையை ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் அவசர மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நடிகர் சங்கத்துக்கு கடந்த ஜூன் மாதம் தேர்தல் நடந்து முடிந்தது. உயர் நீதிமன்ற வழக்குகளில் பிறப்பித்த உத்தரவு காரணமாக வாக்கு எண்ணிக்கை நடைபெறாமல் உள்ளது. உறுப்பினர் நீக்கம் மற்றும் தேர்தல் ரத்து தொடர்பான வழக்குகள் சென்னை உயர்நீதி மன்றத்தில் நீதிபதி கே.கல்யாணசுந்தரம் முன்னிலையில் நிலுவையில் உள்ளன.

இந்நிலையில்,  சங்கம் செயல்படவில்லை எனக் கூறி, நடிகர் சங்கத்துக்கு தனி அதிகாரியாக பதிவுத்துறை உதவி ஐ.ஜி. , கீதாவை நியமித்து நவம்பர் 6ஆம் தேதி வணிகவரித்துறை மற்றும் பத்திரப்பதிவுத்துறை முதன்மை செயலாளர் க.பாலச்சந்திரன் உத்தரவிட்டார்.

தமிழக அரசின் உத்தரவை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்ய உள்ள வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என, சங்கத்தின் முன்னாள் பொது செயலாளர் விஷால் தரப்பில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி பி.டி.ஆதிகேசவலு முன் முறையிடப்பட்டது.

அப்போது, 3000 உறுப்பினர்கள் உள்ள சங்கத்தில், மூன்று அல்லது நான்கு உறுப்பினர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் தனி அதிகாரி நியமித்தது சட்டவிரோதமானது எனவும்,  நடிகர் சங்க தேர்தல் தொடர்பான வழக்குகள் முடிவடையும் தருவாயில் உள்ள நிலையில் தனி அதிகாரியை நியமித்து தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் எனவும் விஷால் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஓம்பிரகாஷ் வாதிட்டார். 

அப்போது நீதிபதி, இந்த மனுவை நடிகர் சங்க தேர்தல் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் நீதிபதி கல்யாண சுந்தரம் முன் பட்டியலிடும்படி, பொறுப்பு தலைமை நீதிபதியிடம் அனுமதி கோருங்கள் என அறிவுறுத்தினார். அதன்படி நடிகர் சங்கத்தின் வழக்குக்கான மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதை அவசர வழக்காக விசாரிக்க பட்டியலிடும்படி கோரிக்கை வைக்கப்பட இருக்கிறது.