கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி சட்டமன்ற தொகுதிகுட்பட்ட வாக்காளர் பட்டியல் தீவிர சிறப்பு திருத்தம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் வாக்காளர் பதிவு அலுவலர் கீதா ராணி தலைமையில் சூளகிரி வட்டாட்சியர் அலுவலகத்தில அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளைச் சார்ந்த பிரதிநிதிகளுடன் நடைப்பெற்றது. அதாவது, எஸ்.ஐ.ஆர் கணக்கெடுப்பு படிவங்களை பூர்த்தி செய்து சமர்ப்பித்தல், இருமுறை பதிவு, நிரந்தரமாக வெளியூர் சென்றவர்கள் மற்றும் முகவரியில் இல்லாதவர்கள் ஆகியோர்களின் விவரங்கள் தொடர்பாக இந்த ஆலோசனைக் கூட்டம் நடைப்பெற்றது.
இக்கூட்டத்தில், காங்கிரஸ், திமுக, அதிமுக, பாஜக, கம்யூனிஸ்ட் கட்சிகள் போன்ற அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர், அப்போது, சூளகிரி பகுதியைச் சேர்ந்த தமிழக வெற்றிக் கழக தொண்டர்கள் கூட்டத்திற்கு வந்து “எங்களை ஏன் இந்த கூட்டத்திற்கு அழைக்கவில்லை” என்று கூறி வாக்காளர் பதிவு அலுவலர் கீதா ராணியிடம் வாக்கு வாதத்தில் ஈடுப்பட்டனர்
அப்போது, கூட்டத்தில் இருந்தவர்கள், அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள்தான் இந்தக் கூட்டத்தில் கலந்துக் கொள்ள முடியும் அங்கிகாரம் இல்லதவர்கள் கலந்துக் கொள்ள முடியாது என தெரிவித்தனர். ஆனாலும், த வெ.க. தொண்டர்கள் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சூளகிரி வட்டாட்சியர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
முன்னதாக, தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தமிழகம் உள்ளிட்ட 12 மாநிலங்களுக்கு சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளுக்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி, நவம்பர் 4 ஆம் தேதி முதல் டிசம்பர் 4 ஆம் தேதி வரை வாக்காளர்கள் இல்லங்களுக்குச் சென்று வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் நடவடிக்கை நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், நவம்பர் 18 ஆம் தேதி தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிக்கையில், தமிழ்நாட்டில் 94.74 சதவீதம் வாக்காளர் கணக்கீட்டு படிவங்கள் விநியோகம் செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்திருந்தது.