6 மாதத்திற்கு முன்பு காணாமல் போனதாக கூறப்பட்ட விவசாயி ஒருவரை அவரது மாமனாரே கொலை செய்து புதைத்த சம்பவம் தேனியில் அரங்கேறியுள்ளது.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகேயுள்ள கடமலைகுண்டை பகுதியைச் சேர்ந்தவர் செல்லப்பாண்டி (42). விவசாயியான இவர் சித்ரா என்ற மனைவி மற்றும் மூன்று குழந்தைகளுடன் வாழ்ந்து வந்தார். இந்நிலையில், செல்லப்பாண்டி 6 மாதங்களுக்கு முன்பு காணாமல் போனார். செல்லப்பாண்டியை அவரது குடும்பத்தினர் பல இடங்களில் தேடியுள்ளனர்.
செல்லப்பாண்டியனின் அண்ணன் ராமராஜ் காணாமல் போன சகோதரர் குறித்து பலரிடமும் விசாரித்துள்ளார். இதில் செல்லப்பாண்டியின் மனைவியான சித்ராவும், சித்ராவின் தந்தையும், செல்லப்பாண்டியின் மாமனாருமான மகாராஜனும் முன்னுக்கு பின் முரணாக பேசியுள்ளனர். இதனால் சந்தேகம் அடைந்த ராமராஜ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதனையடுத்து செல்லப்பாண்டி காணாமல் போனது தொடர்பாக போலீசார் விசாரணையை தொடங்கினர். இதற்கிடையே செல்லப்பாண்டியின் மாமனார் மகாராஜன் தலைமறைவாகியுள்ளார். அவர் மீது போலீசாருக்கு சந்தேகம் வலுக்கவே விசாரணை தீவிரமடைந்தது. இதனையடுத்து மகாராஜன் போலீசில் சரணடைந்துள்ளார்.
காவல்துறையினரிடம் மகாராஜன் அளித்த வாக்குமூலத்தின் மூலம் பல அதிர்ச்சியான தகவல்கள் வெளியானது. தனது மகள் சித்ராவை செல்லப்பாண்டி தொடர்ந்து அடித்து துன்புறுத்தி வந்ததாகவும், இதனால் கூலிப்படையினர் மூலம் செல்லப்பாண்டியை கழுத்தை நெரித்து கொலை செய்ததாகவும் மகாராஜன் வாக்குமூலம் அளித்துள்ளார். மேலும், உடலை பாதி எரித்த நிலையில் புதைத்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, செல்லப்பாண்டியின் உடலை போலீசார் தோண்டி எடுத்தனர். செல்லப்பாண்டியின் கொலை தொடர்பாக மாமனார் மகாராஜன் மற்றும் கூலிப்படையினர் 4 பேரை கைது செய்தனர். மேலும், செல்லப்பாண்டியின் மைத்துனர் உள்ளிட்ட 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.