மனநலம் பாதிக்கப்பட்டிருந்த தாயின் சடலத்தை, 15 கிலோ மீட்டர் தூரம் சைக்கிளில் வைத்து மகன் எடுத்து சென்ற அதிர்ச்சி சம்பவம் நெல்லையில் அரங்கேறியுள்ளது.
மீனவன்குளத்தை சேர்ந்த 63 வயது மூதாட்டி, சற்று மனநலம் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் உடல்நலக்குறைவு காரணமாக, பாளையங்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தசூழலில் அவரது இளைய மகன் பாலன், தனது தாயின் சடலத்தை சைக்கிளில் மீனவன்குளத்திற்கு எடுத்து சென்றுள்ளார். தகவலறிந்த காவல் துறையினர் சடலத்தை மீட்ட நிலையில், சடலத்தை மருத்துவமனையில் இருந்தே அவர் சைக்கிளில் எடுத்து வந்ததாக சர்ச்சை எழுந்தது.
இதனை திட்டவட்டமாக மறுத்துள்ள மருத்துவமனை முதல்வர் ரேவதி, மருத்துவமனையில் மூதாட்டி உயிரிழக்கவில்லை எனவும், ஊழியர்களுக்கு தெரியாமல் பாலன் தனது தாயை அழைத்து சென்றுவிட்டதாகவும் கூறியுள்ளார். மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாலன் தனது தாயாரை தன்னிச்சையாக மருத்துவர்கள் அனுமதியின்றி அழைத்து சென்றது, மருத்துவமனை சிசிடிவியில் பதிவானதாக கூறப்பட்டுள்ளது. மருத்துவமனையிலிருந்து அவர்கள் வெளியேற்றப்பட்டதாக வெளியான செய்திகள் உண்மையல்ல எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே பாலன், உயிருடன் இறக்கும்போதே தனது தாயை அழைத்துவந்துவிட்டதாக கூறும் வீடியோ வெளியாகியுள்ளது.