தமிழ்நாடு

“ஏ.சி போடமாட்டியா? நாங்கள் வழக்கறிஞர்கள்” - கால் டாக்ஸி ஓட்டுநரை தாக்கிய போதை ஆசாமிகள்

webteam

வழக்கறிஞர்கள் எனக்கூறி கால் டாக்ஸி ஓட்டுநரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நூற்றுக்கும் மேற்பட்ட ஓட்டுநர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை அனகாபுத்தூரை சேர்ந்தவர் தனியார் கால்டாக்சி ஓட்டுநர் லோகநாதன்(32). இவர் இன்று அதிகாலை 3 மணியளவில் ஈக்காட்டுத்தாங்கலில் சவாரி ஒன்றை எடுத்துள்ளார். அப்போது 3 பேர் காரில் ஏறியுள்ளனர். அவர்கள் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. கார் ஆலந்தூர் நீதிமன்றம் அருகே சென்று கொண்டிருந்த போது காரில் இருந்த மூவரும் ஏசியை போடச் சொல்லி ஓட்டுநரிடம் கூறியுள்ளனர்.

அதற்கு ஏ.சி. போட்டால் மது வாசனை காரில் வரும் என்பதால் ஏசி போட மறுத்திருக்கிறார். இதனால் காரில் வந்த நபர்கள் தாங்கள்
வழக்கறிஞர்கள். எங்களுக்கே ஏசி போட முடியாதா? எனக் கூறி கார் ஓட்டுநரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர். மேலும் தாக்குதலும் நடத்தியதாக சொல்லப்படுகிறது.

இதில் கார் ஓட்டுநருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. அப்போது அவ்வழியே ரோந்து சென்ற போலீசார் அனைவரையும் காவல் நிலையம் அழைத்து
சென்று விசாரணை நடத்தியுள்ளனர். தாக்கியவர்களுக்கு ஆதரவாக காவல் நிலையத்திற்கு வந்த மேலும் இருவர் கார் ஓட்டுநரை மீண்டும் அடித்துள்ளனர்.

இதனிடையே லோகநாதன், தன்னை வழக்கறிஞர்கள் அடித்து விட்டதாக கூறி வீடியோ ஒன்றை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இதைப்பார்த்த 100க்கும்மேற்பட்ட கால்டாக்சி ஓட்டுநர்கள் பரங்கிமலை காவல் நிலையம் முன்பு குவிந்து வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். காவல் ஆய்வாளர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததையடுத்து அனைவரும் காவல் நிலையம் அருகே காத்திருக்கின்றனர். கால் டாக்சி ஓட்டுநருக்கு தலையில் 12 தையல் போடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.