திருவாரூர், சேலம் மாவட்டங்களுக்கு கனமழை காரணமாக இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்ட போதும், முத்துப்பேட்டை மற்றும் ஏற்காட்டில் உள்ள சில தனியார் பள்ளிகள் கொட்டும் மழையிலும் செயல்பட்டு வருகிறது.
மழை முன்னெச்சரிக்கையாக விடுமுறையையும் மீறி, முத்துப்பேட்டையில் தனியார் பள்ளியானது 10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு கொட்டும் மழையில் வகுப்புகளை நடத்தி வருகிறது. இதுதொடர்பாக மாநகர நிர்வாகம் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றே தெரிகிறது. விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பெற்றோரின் கோரிக்கையாக உள்ளது.
இதேபோல மாவட்ட நிர்வாகத்தின் விடுமுறை அறிவிப்பை மீறி சேலம் ஏற்காட்டிலும் தனியார் பள்ளி செயல்பட்டதாக புகார் எழுந்துள்ளது.
முன்னதாக சேலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது என்பதால், இன்று அங்கு பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டது. ஆனால் ஏற்காட்டில் உள்ள பிரபல தனியார் பள்ளி மட்டும் மாணவர்களின் பெற்றோர்களுக்கு, குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும்படி குறுஞ்செய்தி அனுப்பியதாக கூறப்படுகிறது. அதில் காலை 9 மணிக்கு பள்ளிக்கு வந்துவிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
சேலம் மாவட்டத்தில் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் மழை அதிகரித்தால் ஏற்காட்டில் ஏதேனும் பாதிப்புகள் உண்டாகலாம். அதனைப் பொருட்படுத்தாமல் தனியார் பள்ளி நிர்வாகம் மாவட்ட நிர்வாக உத்தரவை மீறி பள்ளியை இயக்குவதாக புகார் எழுந்துள்ளது.